பதிவுத்தபாலில் அனுப்பாத நோட்டீசை அரசு ஊழியர்கள் பெறக்கூடாது : 'ஜாக்டோ- ஜியோ' அறிவுரை

'பதிவுத்தபாலில் அனுப்பாத வேலை நிறுத்த விளக்க நோட்டீசை பெற்றுக் கொள்ளக் கூடாது', என ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு
ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 முதல் ஜாக்டோ-, ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.செப்.8ல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு அரசு சார்பில் 17 (விளக்கம் கேட்கும் குறிப்பாணை) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்த் துறை, வளர்ச்சித் துறை, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேசிய, மாவட்ட 'ஜாக்டோ ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள், விளக்க குறிப்பாணை நோட்டீசை தலைமை ஆசிரியரிடம் இருந்தோ, உயரதிகாரிகளிடம் இருந்தோ பெறக் கூடாது.


முறைப்படி பதிவுத் தபாலில் மட்டுமே பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.இதனால் அவர்களுக்கு நோட்டீஸ் தருவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஊழியர்களின் வீடுகளுக்கு சென்று நோட்டீஸ் ஒட்ட அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

Image may contain: text

Related