போராட்டத்துக்கு போன ஆசிரியர்கள்: வகுப்பெடுத்த மாவட்ட ஆட்சியர்..! 


சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி இன்று காலை ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி வட்டங்களில் உள்ள ஊராட்சி பகுதிகளில் சுகாதாரம் குறித்த ஆய்வுக்கு சென்றார். அப்போது, மல்வியக்கரை அருகில் உள்ள கருத்தராஜா பாளையம் என்ற ஊரில் இருந்த சத்துணவுக் கூட்டத்தில் ஆய்வுக்கு சென்றார்.

அங்கு ஆய்வு முடித்துக் கொண்டு புறப்படும் நேரத்தில், பக்கத்தில் இருந்த அரசு துவக்கப்பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இன்னொரு ஆசிரியரும் விடுப்பு எடுத்துக் கொண்டு போராட்டத்துக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் ஒவ்வெரு வகுப்பிலும் இருந்த மாணவர்களே பாடம் நடத்திக் கொண்டிருப்பதை கேள்விப்பட்டு, நேராக மூன்று முதல் 5 வகுப்பு மாணவர்கள் இருந்த பகுதிக்கு சென்றவர், ஒவ்வொரு மாணவரின் பெயர் மற்றும் பெற்றோர் விபரத்தை கேட்டு, அதை ஆங்கிலத்தில் விளக்கி கூறினார்.

வங்கி, மருத்துவமனை, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றை ஆங்கிலத்தில் எழுதிக் காட்டியவர், அவற்றின் செயல்பாடுகள் பற்றி மாணவர்களிடம் விளக்கினார்.

பிறகு வகுப்பில் இருந்த ஒவ்வொரு மாணவர்களின் நோக்கம், அதற்கு அவர்கள் எந்தெந்த பாடங்களில் கவனம் எடுத்து படிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு மணி நேரம் வகுப்பெடுத்துள்ளார்.

பின்னர் தம்மம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றவர் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் முறையை பார்த்து மனநிறைவு கொண்டார், சுகாதாரத்துறை அலுவலர்களை அழைத்து "இது மருத்துவமனை, இங்குள்ளவர்கள் மருத்துவர்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நோயினால் பாதிக்கப்பட்டு இங்கு வரும் பொதுமக்கள் இந்த இடத்தை கோவிலாகவும், உங்களை கடவுளாகவும் தான் பார்க்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று பேசினார்.


- பெ.சிவசுப்பிரமணியம்

Related