தனிநபர் பட்டாசு வாங்க கட்டுப்பாடுகள்

தயாரிப்பாளர்களிடமிருந்து தனி நபர்கள் நேரடியாக பட்டாசு வாங்க வேண்டும் என்றால் ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் அவசியம் என பட்டாசு
தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியூர்களில் உள்ள தொழிலதிபர்கள், பிரபலமானவர்கள் உள்ளிட்டோர் பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களிலிருந்து நேரடியாக தங்களுக்குத் தேவையான பட்டாசுகளை வாங்குவது வழக்கம். இவை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இவ்வாறு வாங்குவதென்றால் ஆதார் மற்றும் பான் எண்கள் தேவை என பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளதால், பட்டாசு விற்பனையில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பட்டாசு ஆலைகளில் இருந்து வியாபாரிகள் வாங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில் அவர்களிடம் ஜிஎஸ்டி எண் இருக்கும். ஆனால் தனிநபர்கள் வாங்குவதாக இருந்தால், அவர்கள் ஆதார் அடையாள அட்டையின் நகல், பான் கார்டு நகல் உள்ளிட்டவற்றை ஆர்டர் தரும்போது அதனுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.
இது குறித்து பட்டாசு தயாரிப்பாளர்களில் ஒருவரான இளங்கோ கூறியதாவது:
லாரியில் பட்டாசு அனுப்ப வேண்டும் என்றால், பட்டாசு பெறுபவர்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி. எண் இல்லாத பில்களை லாரி செட் உரிமையாளர்கள் வாங்குவதில்லை.
பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து தனிநபர் வாங்க வேண்டும் என்றால், அவர்களின் ஆதார் எண்ணையும், பான்கார்டு எண்ணையும் பில்லில் குறிப்பிட வேண்டும். அது மட்டுமே லாரி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனை பட்டாசு தயாரிப்பாளர்களும் கடைப்பிடித்து வருகிறோம். எனவே, சிவகாசியில் இருந்து மொத்தமாக பட்டாசு வாங்க விரும்பும், ஜிஎஸ்டி எண் இல்லாத, தனி நபர்கள் தங்களின் ஆதார் மற்றும் பான் எண்களுடன் வர வேண்டும் என்றார்.
இணைய வழி விற்பனை:
சில ஆண்டுகளாக இணைய வழியில் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன்படி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் இணையதளம் மூலம் விற்பனையைத் தொடங்கியுள்ளன. இதைத் தவிர சில நிறுவனங்கள் பட்டாசு ஆலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இணைய வழியில் விற்பனை செய்து வருகின்றன.
பட்டாசுகளை நேரடியாக வந்து வாங்கிச் செல்லும் போது பாதுகாப்பு பிரச்னைகள், ஜி.எஸ்.டி. பிரச்னைகள் உள்ளதால் இந்த ஆண்டு இணைய வழி விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுக்கே பட்டாசு தேடிச்சென்று விடுவதால் இதற்கு வாடிக்கையாளர்கள் பெருகி வருகின்றனர் என இணைய வழி பட்டாசு விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related