தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!
டெல்லி: தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதவி வகித்து வந்த கே.ரோசையாவின் பதவிக் காலம் முடிவடைந்தது. அதன் பின்னர் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு 2016-இல் நியமனம் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக
இருந்து வரும் நிலையில் நிரந்தர ஆளுநரை நியமிக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில் மேகாலயா மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 5 மாநிலங்களுக்கு ஆளுநர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். தமிழகத்துக்கு பன்வாரிலால், அருணாச்சலப் பிரதேசத்துக்கு பி.டி.மிஸ்ரா, பீகாருக்கு சத்யபால் மாலிக், அஸ்ஸாமிற்கு ஜகதீஷ் முகி, மேகாலயாவுக்கு கங்கா பிரசாத் ஆகியோர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஓராண்டுக்கு பிறகு தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமனம் செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Related