‛நீட்' டுக்கு எதிரான அமைதியான போராட்டத்திற்கு தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில், அமைதியான முறையில்
போராட்டம் நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Image may contain: text
போராட்டம்:
இந்த வருடம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை. இந்த தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உறுதியுடன் கூறியது. இதனையடுத்து, அதிக மதிப்பெண் கிடைத்தும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுதும் போராட்டம் வெடித்துள்ளது. ‛நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி மாணவர்கள், அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர்.

பொதுநல வழக்கு:
இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும், அனிதா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஜிஎஸ் மணி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அவமதிப்பு:
விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ‛நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தனிநபர்கள் போராடக்கூடாது. சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் கொண்டு வரப்பட்டநீட்' சட்டத்திற்கு எதிராக போராடக்கூடாது. கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது கோர்ட்டை அவமதிக்கும் செயல்.


நடவடிக்கை:
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக இருக்கும் என்பதால், எந்தவகையான போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்னைகளை அரசு கையாள வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி அனிதா மரணம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என உத்தரவிட்டனர். மேலும், தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.,15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அமைதியான போராட்டத்திற்கு தடையில்லை

இந்நிலையில் இன்று இரவு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது: நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு தடையில்லை . அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். அமைதியான முறையில் சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தலாம். போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்பதை சுப்ரீம் கோர்ட் உணர்ந்தே இருக்கிறது.சட்ட ஒழுங்கு பிரச்னைக்கும் அமைதியான வழி போராட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்

Related