’செப்டம்பர் 6 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்’ - உயர்நீதிமன்றம் அதிரடி

வாகன ஓட்டிகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் டிராஃபிக் ராமசாமி
உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளைக் கடந்த வாரம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி, ’அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதை கட்டாயமாக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார். அப்போது, ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், அசல் உரிமம் கட்டாயம் என்பதை செப்டம்பர் 5-ம் தேதி வரை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையைத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வுக்குப் பரிந்துரைத்தார். இதில் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, செப்டம்பர் 6-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், வெள்ளம், பேரிடர் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களிலிருந்து அசல் ஓட்டுநர் உரிமத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது பொதுமக்களின் கடமை என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது. அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்தால்தான் விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

Related