பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வரும் நவம்பர் 18ம் தேதி திருச்சியில் மாநாடு-ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு

7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிடாவிட்டால் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அரசாணையாக வெளியிடாவிட்டால் நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவது என்று கணேசன் தலைமையிலான ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவித்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ கிராப் அமைப்பின் செயற்குழு கூட்டம் சென்னையில் பெல்ஸ் சாலையில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் 20க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடந்த கூட்டத்தின் இறுதியில் கிராப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியதாவது:

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் அக்டோபர் 15ம் தேதி வரை தற்காலிகமாக நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தோம்.

அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்ததால் காத்திருந்தோம். இன்று 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அந்த குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளது. மேலும், தமிழக முதல்வர் உடனடியாக புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதை வலியுறுத்தி வரும் நவம்பர் 18ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தப்படும். முன்னதாக அக்டோபர் 28ம் தேதி முதல் மாவட்டந்தோறும் ஆயத்த கூட்டங்கள் நடத்துவது, பழைய ஓய்வு ஊதிய திட்டம் குறித்து விளக்க கூட்டம் நடத்தப்படும்.


முதல்வர் எங்களுக்கு ஏற்கெனவே தெரிவித்தபடி 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக அரசாணை வெளியிட வேண்டும். நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு அந்த பரிந்துரை அமல்படுத்தவில்லை என்றால் ஜாக்டோ-ஜியோ கிராப் சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள் என்றார்.

Related