அரசுப்பள்ளி மாணவரின் அசத்தல் சிஸ்டம்: நிலநடுக்கம் ஏற்பட்டால் எஸ்எம்எஸ் வரும்

‘‘2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8,900 பேர்
இறந்தனர். 2016ம் ஆண்டு இந்திய-நேபாள எல்லையில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கமானது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் பலபகுதிகளில் உணரப்பட்டது.


தமிழகத்தில் நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன, பொருட்கள் உருண்டோடியது’’ என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் கேட்கும் போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு உந்துதல்.
நிலநடுக்கம் என்றால் என்ன என்றுகூட தெரியாத சிறுவன் தனுசுக்கு, அதை கட்டுப்படுத்த முடியாதா? என்பது மட்டும் பெரும் கேள்வியானதுஇந்த கேள்வியோடு தான்படிக்கும் அரசு பள்ளி ஆசிரியை சுஜாதாவை அணுகினான் மாணவன் தனுஷ். இயற்கையின் அதிர்வான நிலநடுக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ஆனால், நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணரும் ஒரு சிஸ்டத்தை உருவாக்கினால் எதிர்வரும் ஆபத்தை தடுக்கலாம்.
இதற்காக, ரிக்டர் அளவுகோலை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் என்றார் ஆசிரியை சுஜாதா. அதோடு சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று நிலநடுக்கத்தை உணர்த்தும்  சீஸ்மோகிராபி கருவியின் செயல்பாடுகளையும் தெளிவாக உணர்த்தினார். அதை கூர்ந்து கவனித்த தனுஷ், 6 மாத முயற்சிக்கு பிறகுநிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்த்தும் ஒரு சிஸ்டத்தை தானாகவே உருவாக்கியுள்ளார். சேலம் கொங்கணாபுரம் அருகேயுள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தற்போது 7ம் வகுப்பு படிக்கும் இவரது கண்டுபிடிப்பு, விஞ்ஞானிகளை வியக்க வைத்துள்ளது.
தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவர் தனுஷ் கூறுகையில், ‘‘நிலநடுக்கத்தின் போது ஏற்படும் சிறு அதிர்வை உணரும் வகையில் இந்த சிஸ்டத்தை உருவாக்கியுள்ளேன். இக்கருவிக்கு அடிப்படையானது சீஸ்மோகிராபி என்னும் ரிக்டர் அளவுகோல். ரிக்டர் அளவுகோலில் ஏற்படும் அதிர்வுகளை ஜிபிஆர்எஸ் சிப் மின்காந்த அலைகளாக மாற்றுகிறது. செல்போன் கோபுரத்தில் இணைக்கப்பட்டுள்ள சிப், மின்காந்த அலைகளை உள்வாங்கி, நிலநடுக்கம் வருவதை அலர்ட் செய்கிறது. அந்த டவரில் உள்ள செல்போன்களுக்கு மெசேஜ் அனுப்புகிறது. அதோடு நிலநடுக்கம் ஏற்படும் பகுதியிலுள்ள அனைத்து செல்போன்களுக்கும்  குறுஞ்செய்தியையும் (மெசேஜ்)   அனுப்புகிறது. தற்போது செல்போன்கள் வாழ்வின் அங்கமாக மாறிவிட்டதால், அப்பகுதி மக்கள் நிலநடுக்கம் ஏற்படுவதை மெசேஜ் மூலம் முன்கூட்டியே அறிய முடியும். அதோடு தங்களை பாதுகாத்துஅபாயங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

முதலில் இந்த சிஸ்டத்தை மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தினேன். தலைமையாசிரியை முருகம்மாள் உதவியுடன் மாநில அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்து பரிசு வாங்கியது மிக மகிழ்ச்சியான தருணம்’’ என்றார். எதிர்காலத்தில் விஞ்ஞானியாகி, மக்களின் துயரத்தில் ஆழ்த்தும் இயற்கை சீற்றங்களை கண்டறிந்து காப்பாற்றும் கருவிகளை உருவாக்க வேண்டும் என்ற தனது இலக்கையும் பதிவு செய்கிறார் தனுஷ். தனுஷின் அப்பா செந்தில்குமார் டேங்க் ஆபரேட்டர். அம்மா ஆணையம்மாள் இல்லத்தரசி. அண்ணன் தன்ராஜ் 8ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related