ரூ8,900 கோடி மதிப்பிலான ரூ1,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை: ரிசர்வ் வங்கி

மும்பை: பணமதிப்பிழப்புக்கு பின்னர் 8.9 கோடி ரூ1,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணமதிப்பிழக்குப் பிந்தைய ரிசர்வ் வங்கியின்
ஆண்டறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பணமதிப்பிழப்பைத் தொடர்ந்து 99% ரூ1000, ரூ500 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. ரூ15.28 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன. மொத்தம் வரவேண்டியது ரூ15.44 லட்சம் கோடியாகும்.

அதே நேரத்தில் 8.9 கோடி ரூ1,000 நோட்டுகள் அதாவது ரூ8,900 கோடி பணம் திரும்பி வரவில்லை. மொத்தம் 670 கோடி ரூ.1000 நோட்டுகள். ஒட்டுமொத்த மதிப்பீட்டில் 1.3% ரூ1,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை. பணமதிப்பிழப்புக்கு பின் வந்த ரூபாய் நோட்டுகளில் 7.62 லட்சம் போலியானவை. 2016-17 ஆம் ஆண்டில் ரூ7,965 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. இதில் பெரும்பகுதி புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள்தான். இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related