தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என புதிய
பாடத் திட்டக்குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு. ஆனந்தகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் புதிய பாடத் திட்டத்தை வடிவமைத்தல் குறித்த மண்டல அளவிலான கருத்தறியும் கூட்டம் புதன்கிழமை மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், புதிய பாடத்திட்டக்குழுத் தலைவருமான மு.ஆனந்தகிருஷ்ணன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூ றியதாவது:
புதிய பாடத்திட்டக் குழுவில் பத்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் உறுப்பினர்களிடையேயான கலந்தாய்வுக் கூட்டம் இருமுறை நடந்துள்ளது. கருத்தறியும் கூட்டம் மதுரையில் தான் முதலில் நடத்தப்படுகிறது. அடுத்ததாக கோவை, தஞ்சை, சென்னையில் நடத்தப்படும். கூட்டங்கள் முடிந்த பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் பள்ளியில் மாணவ, மாணவியர் பயிலும் நிலையில், சமூகத்தில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தயாராவது அவசியம். பாடத்திட்டத்தை மாற்றும்போது ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.
பாடத்திட்டம் தயாரிப்பதுடன், அதை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் பள்ளிகளில் ஏற்படுத்துவது அவசியம். மொழி, அறிவியல், கணினி என அனைத்து பாடங்களிலும் அடிப்படை அறிவை மாணவர்கள் சரியாக பெறும் வகையிலும் பாடத்திட்டத்தை அமைக்கவேண்டியுள்ளது.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் (2018-19) 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான புத்தகங்கள் தயார் செய்தல், அவற்றுக்கான பயிற்சியை ஆசிரியருக்கு அளித்தல் ஆகிய பணிகளும் நடைபெறவுள்ளன. அடுத்த 12 ஆண்டுகளுக்கான தொலைநோக்கோடு இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் பொறியியல் பாடமும் சேர்க்கப்படும் என்றார்.

Related