விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு படி இனி இல்லை: தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் ‘கட்’

குடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொண்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த படியை மத்திய அரசு இம்மாதம் ரத்து செய்துள்ளது. விரைவில்  தமிழக அரசு ஊழியர்களுக்கும்
குடும்பக்கட்டுப்பாடு படி நிறுத்தப்பட உள்ளது.


 மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 1960களில்  குடும்பக்கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்டது.  ‘நாம் இருவர் நமக்கு  இருவர்’ என்ற பிரசாரம் தீவிரமடைந்தது. அதுவும் அவசர காலம் அமலில் இருந்தபோது கட்டாயப்படுத்தி குடும்பக்கட்டுப்பாடு  செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி ஆட்கள் பிடிக்க ஏஜென்ட்கள் நியமித்து குடும்பக்கட்டுப் பாடு அறுவை சிகிச்சை செய்வதை அதிகரித்தனர். ஆனால், இந்த  அதிரடிகள் எல்லாம் கைகொடுக்கவில்லை. எனவே‘‘மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு ஊழியர்களுக்கு ஊக்கப்படி  அளிக்கலாம்’’ என்று 1986ம்  ஆண்டு   4 ஊதியக் குழு பரிந்துரை செய்தது.  

அதன் அடிப்படையில் அரசு ஊழியர் அல்லது அவர் வாழ்க்கைத் துணை குடும்ப கட்டுப்பாடு செய்து  கொண்டதற்கான சான்றை அலுவலக த்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்ட காலத்தில் கடைசியாக வாங்கிய  ஊதிய  உயர்வு மாதந்தோறும்  குடும்பக்கட்டுப்பாடு படி’யாக வழங்கப்பட்டது. 

உதாரணமாக, ஒரு ஊழியர் குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்கு முன்பாக 500 ஊதிய உயர்வு பெற்றிருந்தால் அந்த தொகை ஒவ்வொரு மாதமும்  குடும்பக்கட்டுப்பாடு படியாக வழங்கப்படும். இது ஓய்வுபெறும் காலம் வரை தொடர்ந்து வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஒன்று அல்லது 2  குழந்தைகளுக்கு பிறகு குடும்பக்கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். 

அதே நேரத்தில் 3 அல்லது அதற்கு மேல் குழந்தை பெற்றவர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்திருந்தாலும் இந்த சிறப்புப்படி வழங்கப்பட மாட்டாது.இந்நிலையில், 7வது ஊதியக்குழு 2016ம் ஆண்டு அளித்த தனது பரிந்துரையில், ‘குடும்பக்கட்டுப்பாடு குறித்து பொதுமக்களிடையே இப்போது  விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வது குறைந்துள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு படியை நிறுத்தி  விடலாம்’ என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம் இம்மாதம் 7ம்  தேதி  அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் ஒரு நினைவூட்டல் கடிதம்  அனுப்பியுள்ளது. அதில் ‘ஏற்கனவே முடிவு செய்தபடி ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்பக்கட்டுப்பாடு படி  நிறுத்தப்படும்’ என்று அறிவித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த முடிவின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு  இனி குடும்பக்கட்டுப்பாடு படி  கிடைக்காது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது படிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Related