தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல்... பதறியடித்து ஓடி வந்த அரசு அதிகாரிகள்...!

அவிணாசி பள்ளி மாணவர்கள்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ளது கைகாட்டிப்புதூர். இவ்வூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், போதிய அளவிலான ஆசிரியர்கள் இல்லாததால், தங்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதாகக்கூறி அப்பள்ளி
மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட கைகாட்டிப்புதூர் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர வீட்டுக் குழந்தைகள் இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில்தான் கல்வி பயின்று வருகின்றனர். 1 முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், கடந்த சில வருடங்களாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், இப்பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முறையான கல்வி அளிக்க முடியாமல் திணறி வருகிறது பள்ளி நிர்வாகம்.

''தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டாலும், யாரும் சரியாகப் பாடமும் நடத்துவதில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெரும்பாலும் பள்ளியின் தலைமை ஆசிரியரே அனைத்து வகுப்புகளுக்கும் சென்று பாடம் எடுக்க வேண்டிய நிலைமைதான் கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து வருகிறது'' என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்.

இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களும் பலமுறை மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும் மாவட்டக் கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதமாகியும் இன்றளவும் இப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்யப்படாததால், கொதித்தெழுந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
 அவிணாசி பள்ளி மாணவர்கள்

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களின் பள்ளி சீருடை அணிந்தவாறு சாலையில் அமர்ந்து, "எங்களின் பள்ளிக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிராஜ், சம்பவ  இடத்துக்கு விரைந்து வந்தார். அவருடன் வருவாய்த் துறையினரும் இணைந்துவந்து மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசெல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு போராட்டக்காரர்கள் உடன்படாததால், மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலரும் சம்பவ இடத்துக்கு வந்து தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட, இறுதியில், 'கைகாட்டிப்புதூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு வருகிற திங்கட்கிழமைக்குள் நிரந்தரமாக இரண்டு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர். தேவைப்பட்டால் மேலும் ஓர் ஆசிரியரை பணியமர்த்தவும் ஏற்பாடு செய்கிறோம்' என்று உத்தரவாதம் அளித்த பிறகே சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர் மாணவர்கள்.

Related