நகையை விற்று ஸ்மார்ட் வகுப்பறை!' - கலங்க வைத்த அரசுப் பள்ளி ஆசிரியை

கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக சொந்தப் பணத்தில் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர். 'கல்வியை மாணவர்களுக்குத் திணிக்கக் கூடாது
என்பதால்தான், இதுபோன்ற புதுமையான முயற்சிகளை மேற்கொள்கிறேன்' என நெகிழ்கிறார் ஆசிரியை ராஜலட்சுமி.
கடலூர் மாவட்டம், தங்கலிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் ராஜலட்சுமி. அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற இந்தப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைக்க வேண்டும் என்பது இவருடைய நீண்டநாள் கனவு.

ஆனால், அதற்கேற்ற பொருளாதார உதவிகள் எதுவும் கிடைக்காததால், தனது நகைகளை அடமானம் வைத்து ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார். பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு மாணவர்களே வகுப்பெடுக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறார். கணிப்பொறி உதவியோடு கற்றல் முறைகளைக் கவனிக்கும், பொது மக்கள் ஆச்சரியத்தோடு தங்கலிகுப்பம் பள்ளியைக் கடந்து செல்கின்றனர்.

ஆசிரியை ராஜலட்சுமியிடம் பேசினோம். "ஸ்மார்ட் வகுப்பறைகளின் பலனை மாணவர்கள் புரிந்துவைத்துள்ளனர். இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புகளைக் கவனிக்கின்றனர்
தங்கலிகுப்பம் கிராமத்தில் ஏழை மாணவர்கள் மிகுந்து இருந்தாலும், இவர்கள் அனைவரும் கல்வியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். இவர்களின் ஆர்வத்தைப் பார்த்துத்தான், ஸ்மார்ட் வகுப்பறையை அமைக்கும் முடிவுக்கு வந்தேன். வெளியில் எந்த உதவியும் கிடைக்காததால், என்னுடைய நகைகளை விற்றதில் 75 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.


பிறகு, என்னுடைய கணவரின் எல்..சி பணத்தில் இருந்து 25 ஆயிரத்தை எடுத்து ஒரு லட்ச ரூபாயில் டிஜிட்டல் வகுப்பறையை அமைத்தேன். இப்போது கணினி இயக்குவதிலிருந்து, டிஜிட்டல் பணிகளை என்னுடைய மாணவர்களே பார்த்துக்கொள்கின்றனர்" என்றார் நெகிழ்ச்சியோடு.

Related