பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க புதிய குழுவை அமைத்தது பள்ளிக்கல்வித் துறை!

தமிழக பள்ளிக்கல்வி முறையை மேம்படுத்துவதற்கும், பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக்கும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது பள்ளிக்கல்வித் துறை.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்கப்
இந்தக் குழு, பள்ளிகளில் தரமான கல்வி வழங்கவும், அறிவியல், சமூகப் பொருளாதார வளர்ச்சி மாற்றங்களை உள்ளடக்கிய வகையிலும், மாணவர்களின் உயர் கல்விக்கு உதவவும், வேலைவாய்ப்புக்கு உகந்தவகையிலும் புதிய பாடத்திட்டத்தையும் பாடப்புத்தகங்களையும் மாற்றி அமைக்க, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பத்தையும் கணினிப் பாடத்தையும் அறிவியல் பாடத்துடன் இணைத்துக் கற்பிக்கவும், படைப்பாற்றல் வழியில் கற்றலை அறிமுகப்படுத்தவும், தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் இலக்கிய உணர்வை உள்ளடக்கிய வகையிலும் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு ஆலோசனை வழங்கும். மேலும், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்துக்கும், இதர அமைப்புகளின் பாடத்திட்டங்களுக்கு இணையான தரமான பாடத்திட்டத்தை உருவாக்க இந்தக் குழு முழு கவனம் செலுத்தும்.
குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் செயல்படுவார். இந்தக் குழுவில் கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் இராமானுஜம், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி, வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, எழுத்தாளரும், சூழலியல் ஆய்வாளருமான தியோடர் பாஸ்கரன், சென்னை புதுக் கல்லூரி உயிர் தொழில்நுட்பவியல் துறை முன்னாள் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், கல்வியாளர் கலா விஜயகுமார், ஓவியர் டிராஸ்கி மருது ஆகியோரை உறுப்பினர்களாகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரை உறுப்பினராகவும் செயலராகவும் கொண்டு இந்தக் குழு செயல்படும் எனத் தெரிவித்திருக்கிறது பள்ளிக்கல்வித் துறை.
இந்தக் குழுவின் செயல்பாடு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனிடம் பேசினோம். ``பள்ளிக்கல்வியில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவரவேண்டியுள்ளது. முதன்மையாக, தரமான பாடத்திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். கற்பிக்கும் முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். மாணவர்கள் மனதில் அடிப்படை விஷயங்கள் நன்கு பதியும் வகையில் சொல்லிக்கொடுப்பதற்கு வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து, பரிந்துரை செய்ய வேண்டும். மாணவர்கள், தற்போது அகில இந்திய அளவில் போட்டியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதற்கு, தமிழக மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் வெற்றிபெறவும் உதவும் வகையில் பாடத்திட்டங்களைத் தயார்செய்ய வேண்டியுள்ளது. இதையெல்லாம் முக்கிய அம்சங்களாகக்கொண்டு மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்" என்றார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் பள்ளிக்கல்வி முறையை மேம்படுத்த அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவில் உறுப்பினர்கள் மாற்றம்செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த உயர்நிலைக் குழுவில் சென்னைப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறை முன்னாள் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் சுவாமிநாதப்பிள்ளை ஆகியோர் வயது முதிர்வின் காரணமாக விடுவிக்கப்பட்டு, குழுவில் புதியதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற விஜயகுமார் ..எஸ்., தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.இராமசாமி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜோதிமுருகன், கல்வியாளர் எஸ்.ஆனந்தலட்சுமி ஆகியோர் புதியதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தக் குழுவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைவராகவும், பள்ளிக்கல்வித் துறை அரசுச் செயலாளர், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் பாலசுப்பிரமணியன், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இந்தக் குழு `ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்தும், தரமான கல்வியை அளிப்பதற்காக
பள்ளிகளுக்குத் தேவைப்படும் கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் உபகரண வசதிகள் குறித்து ஆய்வுசெய்யும். மேலும், தேர்வு முறைகளில் சீர்திருத்தங்கள், ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சிகள், பள்ளி செயல்பாடுகள், ஆய்வு முறைகளில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் தமிழக அரசுக்குப் பரிந்துரைசெய்யும். இந்தக் குழு ஏற்கெனவே தமிழக அரசுக்குப் பலவிதமான பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இந்தப் பரிந்துரைகளை பள்ளிக்கல்வியில் செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன' என்கிறது பள்ளிக்கல்வித் துறை.

பள்ளிக்கல்வியில் வர இருக்கும் மாற்றங்களை வரவேற்போம்

ஞாசக்திவேல் முருகன்

Related