" ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மாணவரே , ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆசிரியரே "

" ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மாணவரே , ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆசிரியரே "
     

       மேற்காண் தொடருக்கான உள்ளார்ந்த அர்த்தத்தை , ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக உணர்ந்திருப்பர், தம் அனுபவங்கள் வாயிலாக புரிந்திருப்பர் .....
         ஒரு ஆசிரியரிடம் மாணவன் கற்க வேண்டிய விஷயங்கள் எந்த அளவினுக்கு உள்ளனவோ....அதற்கு சற்றும் குறையாமல் ...மாணவனிடம் ஆசிரியர் உணர வேண்டிய , அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் மிகுதியாக உள்ளன....
      
            எங்கள்.... கட்டளை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ...பிள்ளைகளின் கல்வித் தரத்தை மென்மேலும் உயர்த்தும் நோக்கில்...."திண்ணைப்பள்ளி " என்னும் திட்டத்தை முறையாக செயல்படுத்த முனைந்தோம். அதன் முதல் படியாக எங்கள் பள்ளியின் முதல் திண்ணைப்பள்ளியானது 19.6.2017 அன்று ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு . வரதராஜுலு அவர்களைக் கொண்டு துவக்கப்பட்டது. இதன் காரணமாக திண்ணைப் பள்ளியின் அமைப்பு , செயல்பாடு , நோக்கம் ஆகியன சார்ந்த புரிதல் மாணவர்களிடம் சிறப்பாக ஏற்பட்டிருந்தது.
              அதன் தொடர்ச்சியாக மீத்திறன் மாணவர்கள் மற்றும் மாணவிகளை "திண்ணைப்பள்ளி ஆசிரியர்" ஆக கொண்டு திண்ணைப்பள்ளி அமைக்கப்பட்டது ...இதில் அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு மிக அருகாமையில் உள்ள கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு ...திண்ணைப்பள்ளி ஆசிரியர்  அக்குழுவிற்கு கற்பிக்குமாறு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக கிராமம் முழுவதும் பரவலாக இருக்கும்படியாக எட்டு திண்ணைப்பள்ளிகள்  அமைக்கப்பட்டுள்ளது.
          மேலும் இந்த திண்ணைப் பள்ளிகளுக்கென பிரத்யேகமாக தமிழ் மற்றும் ஆங்கில பயிற்சி கட்டகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கட்டகங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் ஒரு வாரத்திற்கென மாணவர்களுக்கு படிப்பதற்காக அளிக்கப்பட்டு... பின்பு திங்கள்  கிழமை அன்று சிறு தேர்வின் மூலம் மாணவர் அடைவு சோதிக்கப்படும். சிறப்பாக செயல்படும் திண்ணைப்பள்ளி ஆசிரியருக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படும். இதன் விளைவாக மாணவர் நடத்தையில்  கணிசமான முன்னேற்றத்தை காண முடிகிறது. இனி வரும் காலங்களில் மேலும் மாணவர்களின் கல்வித்திறன் சிறப்பாக உயருமென்று உணர முடிகிறது.
          கிராமங்களில் பரவலாக காணப்படும் பிரச்சினைகளுள் ஒன்று..கிராமங்களில் உள்ள இயல்பான நெருக்கமான சூழலின் காரணமாக ...பிள்ளைகளுக்கான நட்பு வட்டம்  என்பது பெரிது...அதன் காரணமாக பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பது...அப்படியே வீட்டிற்கு சென்றாலும் ...சிறிது நேரம் கூட வீட்டில் தங்காமல் இருப்பது போன்றன... இந்த பிரச்சினை திண்ணைப்பள்ளி முறையால் எளிமையாக , முழுவதுமாக களையப்பட்டுள்ளது...பிள்ளைகள் பள்ளி முடிந்து உடனே வீட்டிற்கு சென்று திண்ணைப்பள்ளிக்கு செல்வதை காண முடிகிறது.
              இன்று திண்ணைப்பள்ளிகளை எதேச்சையாக சென்று பார்த்த போது ...பிள்ளைகள் சுய ஆர்வம் , சுய கட்டுப்பாடு ஆகிய தன்மைகளோடு ஈடுபாட்டுடன் கற்றல் செயல்களில் ஈடுபடுவதை பார்த்து மனம் கொண்ட மகிழ்ச்சிக்கும் , நெகிழ்ச்சிக்கும் அளவே கிடையாது....
            பிள்ளைகள் மீது நம்பிக்கை கொண்டு செய்த செயல் வெற்றியின் படிகளில் நடை போடுவதை உணர முடிகிறது.
                இந்த அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி....
.சுகதேவ்
இடைநிலை ஆசிரியர்
...நி.பள்ளி
கட்டளை.
மரக்காணம் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்டம்

அலைபேசி: 9659990091

Related