காமராஜர் ஒரு சகாப்தம்

அறிவார்ந்தவர்களும், தன்னலம் இல்லாதவர்களும் நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்களும், அப்பழுக்கற்ற தொண்டுள்ளம் கொண்டவர்கள் மட்டுமே ஒரு
காலகட்டத்தில் அரசியல் உலகில் இருந்தனர். நெருங்கிய உறவுகளை நெஞ்சில் வைத்துக் கொள்ளாதவர்கள் மட்டுமே தலைவனாக வேண்டும் என்றார் கிரேக்க அறிஞர் பிளேட்டோ.
அடிமை இந்தியாவில் பிறந்த ஏழை மனிதர் காமராஜர். ஆறாம் வகுப்பு வரையே படித்த பாமரர். ஆனால் அவர் 1954-ல் முதல்வரானதும் தமிழகத்தில் கல்வி வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.(இன்றும் வெள்ளம் ஓடுகிறது ஆனால் அது வேறு) ஊருக்கு தகுந்தாற்போல் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என்று உருவாக்கினார் கல்வி வள்ளல். தமிழகத்தில் முதன் முறையாக மதிய உணவு திட்டத்தைத் தொடங்கி லட்சக்கணக்கான மாணவர்கள் பசியாற பகல் உணவுக்கு வழியமைத்தவர்.

எட்டுப்பேர் கொண்ட அமைச்சரவையில் ஒன்பது ஆண்டுகளில் அவர் செய்து முடித்த சாதனைகள் எத்தனை?

ஊழலின் நிழல் படியாத ஒரு உன்னத ஆட்சியை தமிழ் மக்களுக்கு தந்தவர் பெருந்தலைவர். ஆறு ஓடுமிடமெல்லாம் அணைகள் கட்டி விவசாயத்தை வளர்த்து,தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவில் இரண்டாமிடத்துக்கு உயர்த்தியவர்.

கீழ்ப்பவானி, மணிமுத்தாறு, காவிரி டெல்டா, ஆரணியாறு, வைகை அணை, அமராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம், நெய்யாறு, மேட்டூர் கால்வாய்த்திட்டம் என விவசாயத்திற்கு உயிர் கொடுக்கும் பாசனத்திட்டங்கள்.
தமிழகத்தில் தொழில் துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலைஎன மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இவையனத்தும் காமராஜர் அறிக்கையளவில் இல்லாமல் கொண்டு வந்த திட்டங்கள்.
மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதிகே-ப்ளான் (K-PLAN)” எனப்படும்காமராஜர் திட்டத்தினைகொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஒரு உறவையும் தன் பக்கம் நெருங்க அனுமதிக்காதவர், தன் தங்கையின் பேரனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத்தர மறுத்த மகான். முற்றும் துறந்த ஆதிசங்கரரும், பட்டினத்தாரும் கூட துறக்க முடியாத தாயின் உறவை, பொது வாழ்க்கைத் தூய்மைக்காக தள்ளி வைத்தவர் காமராஜர்.
விடுதலைப் போராட்டத்தில் 9 ஆண்டு சிறைவாசம், 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, 5 முறை சட்டமன்ற உறுப்பினர், 4 முறை நாடாளுமன்ற உறுப்பினர், 9 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வர், 5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸின் தலைவர், 2 முறை இந்தியப் பிரதமர்களை உருவாக்கிய தமிழர் காமராஜர்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?
காமராஜர் கண் மூடினார். அவர் வாழ்ந்த்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார், அவர் உபயோகித்த காரை கட்சி எடுத்துக் கொண்டது, அவர் உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது, அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது.

ஜனத் தலைவர் யார்?
இது பாரதி சொன்னது... “ யாவன் ஒருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது இந்த வறிய நிலையில் இருப்பது பற்றி இராப்பகல் வருந்துகிறானோ ,
யாவன் ஒருவன் இந்த முப்பது கோடி இந்தியரும் வயிறாற உண்பதற்குஉணவும் உடுக்க உடையுமின்றித் தவிக்கிறார்களே என மனமிரங்கி கண்ணீர் சொரிகிறானோ
யாவன் ஒருவன் பொதுஜனங்களுக்கு வந்த சுக துக்கங்களும் கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாக எண்ணி அனுதாபிக்கிறானோ
யாவன் ஒருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டுத் தனது உயிரையும் இழக்கத் தயாராய் இருக்கிறானோ ..”
அவன் ஒருவனேஜனத் தலைவன்” - (இந்தியா 12.1.1907)
தன்னலம் மறுத்து பொதுநலத்துக்காக தொண்டாற்றும் மனிதர்கள்தான் விவேகானந்தர் பாதையில் உண்மையான துறவிகள். அவர்கள் ஆன்மிகத்தில் இருந்தால் என்ன அரசியலில் இருந்தால் என்ன?
பாரதியின் பார்வையில் காமராஜர் வெகு ஜனத் தலைவர் இல்லையெனில் இங்கே யார் தலைவன்?”


தகவல் குறிப்புகள் - இணையம்

Related