பள்ளிக்குச் செல்ல வேண்டுமா? ஆசிரியர்கள் குழப்பம்!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று பரவிய தகவலால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
ஏற்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் எதிர்பார்த்த நிலையில், வெயில் காரணமாக ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


ஆனால், ஆசிரியர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்று தகவல் பரவியது. ஆனால், இதுபோன்று எந்த முறையான அறிவிப்பும் வெளியிடப்படாததால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.


நிகழ் கல்வியாண்டின் வேலைநாள் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது; தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய மாணவர் சேர்க்கை, அரசின் இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு அளித்தல், பள்ளியில் சுகாதார நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது போன்றவற்றை தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.


ஆனால், கல்வித் துறையிலிருந்து உறுதியான தகவல் வராததால், ஆசிரியர்கள் மத்தியில் ஜூன் 1-ஆம் தேதி இந்த குழப்ப நிலை நீடித்தது.


பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒரு சில ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே வந்தனர். அவர்கள் மாணவர் வருகைப் பதிவேடு எழுதுவது உள்ளிட்ட பணிகளை முடித்து விட்டு சில மணி நேரங்களில் புறப்பட்டு விட்டனர்.


பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே வந்திருந்தனர். பிற ஆசிரியர்கள், ஊழியர்களும் வரவில்லை.


பணியிட மாறுதல் பெற்றவர்கள் அந்தந்த பள்ளிகளில் வியாழக்கிழமை (ஜூன் 1) பணியில் சேர்ந்தனர்.


இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, கல்வித் துறை சார்பில் எந்தத் தகவலும் வரவில்லை. அப்படியே வந்தாலும், மாணவர்கள் இல்லாமல் என்ன செய்யப் போகிறோம். அதேபோன்று, தலைமையாசிரியர்கள் மற்றும் சில மூத்த ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளுக்கு முன்னதாக ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவும் வராத நிலையில் எப்படி பள்ளிக்குச் செல்வது என்று எதிர்கேள்வி எழுப்பினர்.


இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமியிடம் கேட்ட போது, இது வழக்கமான நடைமுறை. வெயில் காரணமாக மாணவர்களுக்கு மட்டுமே ஜூன் 6ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்குச் சென்று நிகழ் கல்வியாண்டுக்கான அலுவல் பணிகளை தயார்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களும், பணியிட மாறுதல் ஆணையைப் பெற்று உரிய பள்ளிகளுக்கு பணிக்குச் செல்ல வேண்டும் என்றார்.

Related