தாமதமாகும் பல்கலை சான்றிதழ்கள் : TRB தேர்வர்கள் அச்சம்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில், பட்டப் படிப்பு
முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இப்பல்கலையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. ரெகுலர் மற்றும் தொலைநிலை கல்வியில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களுக்குள், மதிப்பெண் மற்றும் பட்டச் சான்றிதழ்களை பல்கலை வழங்க வேண்டும். ஆனால் நவ.,2016ல் தேர்வு எழுதி, முதுகலை முடித்த பலருக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் பணி நியமனங்களுக்கான போட்டி தேர்வு டி.ஆர்.பி., சார்பில் ஜூலை 2ல் நடக்கிறது. இதற்கு மே 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 2016ல் முதுகலை படிப்பு முடித்த பலர், இதற்கு விண்ணப்பிக்கவுள்ள நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலை இதுவரை வழங்கவில்லை. இதனால் விண்ணப்பிக்க முடியுமா என அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், "மதிப்பெண் சான்றிதழ் மட்டுமல்ல பட்டச்சான்று ('கான்வக்கேஷன்') எம்.பில்., சான்றிதழ்கள் பெறாதவர், அதற்காக உரிய கட்டணம் செலுத்தியும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். இதனால் பலர் பி.எச்டி.,க்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். துணைவேந்தர் இல்லாததால் இந்த நிலை நீடிக்கிறது. இப்பிரச்னைக்கு தற்போதுள்ள பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றனர்.

Related