ஏழாவது ஊதியக் குழு அமலாக்கம்: ஊழியர் சங்கங்களிடம் அரசு கருத்துக் கேட்பு

ஏழாவது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்களுடன் தமிழக அரசு வெள்ளிக்கிழமை
பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தை சனிக்கிழமையும் (மே 27) நடைபெறுகிறது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்லூரியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட 150 -க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு கருத்துகளைக் கோருகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை 80 -க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்படாத சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
மத்திய அரசின் 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு முடிவுகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு தமிழக அரசால் அலுவலர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் நிதித் துறை செயலாளர் .சண்முகம், அரசுத் துறை செயலாளர்கள் நிரஞ்சன் மார்டி, .உதயச்சந்திரன், ஸ்வர்ணா, உமாநாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Related