அரசு பள்ளிகள் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? கல்வித்துறை அதிகாரிகளுக்கு நேரமில்லை

சென்னை மாவட்ட பள்ளிகளின் கல்வித்தரத்தை முன்னேற்ற,
கல்வித்துறை நிர்வாகத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை, தனியார் மெட்ரிக் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி பள்ளி என, 439 மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 32 மாநகராட்சி பள்ளிகளும், 21 அரசின் நேரடி பள்ளிகளும் செயல்படுகின்றன.


 100 சதவீத தேர்ச்சி
இவற்றில், மாநகராட்சி பள்ளிகளில், 6,423 மாணவர்களும், அரசு பள்ளிகளில், 4,359 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இதில், மாநகராட்சியின் இரண்டு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில், ஒரு பள்ளி கூட, 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:சென்னை மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், பொது தேர்வு தேர்ச்சி விகிதம், கடந்த பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இதற்கு, மாவட்ட கல்வித்துறையே முக்கிய காரணம்.

மாநகராட்சி பள்ளிகளுக்கு, தனியாக கல்வி அதிகாரி நியமிக்கப்படுகிறார். இந்த பதவியில் பெரும்பாலும், ..எஸ்., அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர். அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில், பல்வேறு புதிய திட்டங்கள் வகுத்து, மாநகராட்சி பள்ளிகளில் பாடம் கற்றுத்தரப்படுகிறது. அதேபோல், அரசு பள்ளிகளை விட அதிக அளவில், மாநகராட்சி பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர். அதனால், அங்கு பாடம் கற்பித்தல், தேர்வு நடத்துதல் போன்றவற்றில் தரம் உயர்கிறது.

கல்வி தரம் சரிவு
ஆனால், பள்ளிக்கல்வித்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளை கவனிக்க, நான்கு மாவட்ட கல்வி அதிகாரிகளும், அவர்களுக்கு மேல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி...,வும் உள்ளனர்.ஆனால், அதிகாரிகள் பெரும்பாலும், அரசின் விழாக்கள், கல்வித்துறை கூட்டங்கள் நடத்துவது, அமைச்சரகம், செயலகம் மற்றும் அதிகாரிகளின் பணிகளை கவனிப்பது, தனியார் பள்ளிகளின் பிரச்னைகளை ஆய்வு செய்வது போன்றவற்றுக்கே நேரத்தை செலவிடுகின்றனர். அதனால், கல்வித்தரம் சரிந்து கொண்டே செல்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

குடோனாக பயன்படும் அரசு பள்ளி
சென்னையிலுள்ள, 21 அரசு பள்ளிகளில் அசோக்நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், சூளைமேடு போன்ற இடங்களில் உள்ள மகளிர் பள்ளிகளை தவிர, மற்ற பள்ளிகளில், கல்வித்தரம் குறைவாகவே உள்ளது. அவற்றில் மாணவ, மாணவியர் சேர விரும்புவதில்லை. எழும்பூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், அங்குள்ள வகுப்பறைகள், பள்ளிக்கல்வியின் பல்வேறு அலுவலகங்களாக மாற்றப்பட்டு உள்ளன.


இந்த பள்ளியில், ஆறாம் வகுப்பில், ஒரே ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். எழும்பூர் மாநில மகளிர் பள்ளியிலும் மாணவியர் சேர்க்கை குறைந்ததால், அங்குள்ள கட்டடங்களும், பள்ளிக்கல்வி அலுவலகங்களாகவும், இலவச சைக்கிள் தயாரிக்கும் மையம் மற்றும் நோட்டு புத்தக குடோன்களாகவும் மாறி விட்டன

Related