நீட் தேர்வால் தொடரும் குழப்பம் - எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தள்ளிப்போகும் அபாயம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பித்தல் மே 25ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வு விவகாரத்தால் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கல்வியாளர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் குழப்பம் நீடிக்கிறது.


 மே 7ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. அந்த தேர்வு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வாக நடத்தப்படவில்லை. பீகார் மற்றும் உத்திர பிரதேசத்தில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானாதாக கூறப்படுகிறது.

இதே போல் நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது. இதுவரை தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுத்தரவில்லை.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: தற்போது பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்கள், அரசு பல்கலைகழகங்களில் விரைவில் வகுப்புகள் தொடங்க உள்ளன.

பொறியியல் படிப்பு, கால்நடை மருத்துவ அறிவியலுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆவற்றுக்கான ஆன்லைன் பதிவு நடந்து வருகிறது. ஏராளமான மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை மாநில அரசு இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அரசு தான் கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 25ம் தேதி மருத்துவ கலந்தாய்வு விண்ணப்பித்தல் தொடங்கியது. ஆகஸ்ட் 1ம் தேதி எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது.


இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நீட் தேர்வு வேண்டும் என்கிறது. மாநில அரசு நீட் தேர்வு வேண்டாம் என்றுகிறது. தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை, முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் சில மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related