தலைமையாசிரியர் குலத்தின் பெருமை பாலு.

கீச்சாங்குப்பம்
நாகை மாவட்டத்தில் ஒரு பக்கம் ஆற்றையும் இன்னோரு பக்கம் கடலையும்
கொண்ட அழகிய மீனவ கிராமம்.
 
இந்த கிராம மக்கள் தங்கள் உயிராக நேசிப்பது இங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைத்தான்.காரணம் தங்களில் பலரால் முடியாத படிப்பை தங்களது குழந்தை செல்வங்கள் இங்கு தொடங்குவதாலும் தொடர்வதாலும், ஒன்று முதல் எட்டு வரை வகுப்புகள் உண்டு.
இந்தப் பள்ளிக்கு கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந்தேதி கடுமையான சோதனை ஏற்ப்பட்டது.அன்று சுனாமி சூறையாடிய 600 உயிர்களில் இந்த பள்ளிக் குழந்தைகள் 80 பேரின் உயிர்களும் உண்டு,பள்ளிக் கட்டிடமும் இடிந்து சேதமானது.

எந்த ஆறும், கடலும் அழகூட்டியதே அதே ஆறும் கடலும் பயமுறுத்தவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இந்தப் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து தொலைவில் உள்ள நகர்ப்புற பகுதி பள்ளிக்கு தங்களது பிள்ளைகளை அனுப்ப ஆரம்பித்தனர்.

நானுாறு பேர் படித்த பள்ளியின் எண்ணிக்கை 190க்கு இறங்கியது, இந்த எண்ணிக்கைக்கு எதற்கு 11 ஆசிரியர்கள் என்று நான்கு பேரை கல்வித்துறை இடமாற்றம் செய்தது.

இப்படி தாங்கள் பார்த்து பார்த்து பெருமைப்பட்ட பள்ளி தங்கள் கண் எதிரே அதன் பெருமையை இழந்து கொண்டிருப்பதை பார்த்து செய்வதறியாது திகைத்தனர் ஊர் தலைவர்கள்.இந்த சூழ்நிலையில்தான் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் பாலு.

நல்ல கட்டிடத்தில் தரமான கல்வியைக் கொடுத்தால் மாணவர்கள் இந்த பள்ளியைவிட்டு எங்கும் போகமாட்டார்கள் ஆகவே தரமான கல்வியைக் கொடுப்பது என முடிவு செய்தார்.ஊர் மக்கள் மாவட்ட நிர்வாகம் கல்வித்துறை அதிகாரிகள் என அனைவரது ஒத்துழைப்போடும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது.

நுாலகம்,ஆய்வுக்கூடம், குடிநீர், சுகாதாரமான கழிப்பறை இவற்றுடன் ஒரு வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பறையாகவும் மாற்றினார்.ஸ்மார்ட் வகுப்றை என்றால் இந்த வகுப்பில் கணணி இருக்கும் இதன் வழியாக புரஜக்டர் உதவியுடன் டிஜிட்டல் திரையில் பாடம் நடத்தப்படும்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் யானையை பற்றிய பாடம் என்றால் வெண் திரையில் யானையைப் பற்றி ஒரு டாகுமெண்டரி படம் ஒடும்,யானை குட்டியாக இருப்பதில் இருந்த வளர்வது வரையிலும், அதன் சத்தம் உணவு வாழ்க்கை முறை என்று அனைத்து அம்சங்களும் ஒலி ஔியாக தெரியும். இந்தப் படத்தை பார்த்த பிறகு பக்கத்தில் உள்ள போர்டில் யானையைப் பற்றி பாடம் நடத்தும் போது குழந்தைகள் எந்தக் காலத்திலும் யானையைப் பற்றிய அழியாத அறிவைப் பெறுவர்.இதுதான் ஸ்டார் கிளாஸ்.


இப்படி ஒரு வகுப்பு இந்தப் பள்ளியில் நடத்தப்படுகிறது என்பதை ஊர்மக்களிடம் சொல்வதற்காக இலவச மருத்துவமுகாம் நடத்தினார் மருத்துவ முகாமிற்கு வந்த பொதுமக்கள் பள்ளி கட்டிடத்தையும்,இருந்த வசதிகளைப் பார்த்துவிட்டு அந்த வருடமே தங்களது பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்த்தனர் இதன் காரணமாக பள்ளியின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது.
மாவட்ட நிர்வாகத்தை உரிய முறையில் அணுகி தன்னிறைவுத்திட்டம் உள்ளீட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்கிறதோ அனைத்து திட்டங்களையும் பள்ளிப்பக்கம் வரச்செய்ததன் காரணமாக அடுத்தடுத்து வந்த மாதங்களில் அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறையாகியது.

மேலும் பள்ளியில் சிறுவர் பூங்கா, மாடித்தோட்டம் அமைத்ததுடன் மாணவர்களுக்கு கூடுதலாக யோகா,கராத்தே,ஸ்போக்கன் இங்கீலீஸ் என்று பலவும் கற்றுக்கொடுத்ததை அடுத்த பழைய எண்ணிக்கையைவிட மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

தனியார் பள்ளிகளின் கவர்ச்சி காரணமாக நகர்ப்புறங்களிலேயே அரசுப்பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டுவரும் காலகட்டத்தில், கீச்சாங்குப்பம் கிராமத்து அரசுப் பள்ளியில் மட்டும் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றதை அடுத்து மாவட்ட கலெக்டர் உள்ளீட்டோர் பாராட்டினார்,பள்ளி ஆய்வு செய்யப்பட்டு ஐஎஸ்ஒ சான்றிதழுக்கு தகுதி பெற்றது.

கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்க தயராக இருந்தாலும் தனியார் பள்ளிகளுக்கு கிடைக்காத ஐஎஸ்ஒ சான்று ஒரு மீனவ கிராமத்து பள்ளிக்கு கிடைத்தை அடுத்து அந்த சான்றிதழ் பெறுவதை விழாவாகக் கொண்டாடினர்,தலைமையாசிரியர் பாலுவிற்கு மக்கள் மோதிரம் அணிவித்து கவுரவித்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த விழாவிற்கு வந்த கிராம மக்கள் மேளதாளம் முழங்க தங்களால் முடிந்தது என்று பள்ளிக்கு பீரோ,பேன்,நாற்காலி,பெஞ்சு என்று சுமார் இரண்டு லட்ச ரூபாய்க்கு சீர்வரிசை கொண்டுவந்து கொடுத்தது வரலாற்றிலேயே இல்லாத ஒன்று.

தலைமை ஆசிரியர் பாலு மாநில மற்றும் தேசிய அளவிலான நல்லாசிரியர் விருது பெற்றவர் ஆனாலும் அந்த பந்தா எதுவுமே இல்லாமல் விடுமுறை நாட்களில் கூட பள்ளியில் உட்கார்ந்து இந்த ஏழை எளிய மாணவர்கள் முன்னேற்றத்திற்கு அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே அதற்கான வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஊர் தலைவர்கள்,மக்கள்,சக ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் என பலரது உதவியும் ஒத்துழைப்பும் உழைப்பும்தான் இதைச் சாத்தியாமாக்கியிருக்கிறது ஆகவே பாராட்டு என்பது அனைவருக்கும் உரித்தானதாகும் என்கிறார் அடக்கத்துடன்.

பாலு சார் பள்ளியில் எம் பிள்ளையை சேர்கப் போகிறேன் என்பதை கீச்சாங்குப்பத்தில் பரவலாக பேசுவதை கேட்க முடிந்தது இப்படி ஒரு அரசுப்பள்ளியை தன் பள்ளியாக நினைத்து செயல்படும் பாலு போன்ற தலைமை ஆசிரியர்களால்தான் நாடு கொஞ்சமாவது தன் நெஞ்சை நிமிர்திக் கொள்கிறது.


தலைமை ஆசிரியர் பாலுவை பாராட்ட நினைப்பவர்களுக்கு அவரது எண்:8608227549.

எல்.முருகராஜ்

Related