காந்தி படித்த பள்ளிக்கூடம் அருங்காட்சியமாகிறது!
தேசத்தந்தை மகாத்மா காந்தி படித்த ஆல்ஃபிரெட் உயர்நிலைப்பள்ளி, அருங்காட்சியம் அமைப்பதற்காக மூடப்பட்டது. இந்தப் பள்ளி 164 வருட பாரம்பரியமுடையது.

தற்சமயம் இது மோகன்தாஸ் காந்தி உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்படுகிறது. மாநில மொழியான குஜராத்தி வழியில் இங்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. கடந்த வருடம் இப்பள்ளியை அருங்காட்சியமாக மாற்ற குஜராத் அரசு முடிவுசெய்தது. இதனால் இப்பள்ளியில் பயின்ற 125 மாணவர்களுக்கும் அவர்களது கல்விச் சான்றிதழ் வழங்கும் பணியை பள்ளி அதிகாரிகள் தொடங்கினர்.

இந்நிலையில் ராஜ்கோட் நகராட்சிக் குழுமம், இந்தப் பள்ளியை மூடிவிட்டு அருங்காட்சியகம் அமைக்கப்போவதாக மாநில அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. இதனையடுத்து குஜராத் அரசு பள்ளிக் கட்டடத்தை ராஜ்கோட் நகராட்சிக்கு கைமாற்றித் தர கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. ரூ 10 கோடி செலவில் இந்தப் பள்ளியை அருங்காட்சியமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. காந்தியின் வாழ்க்கையையும் காலகட்டத்தையும் காட்சிப்படுத்தும் சிறப்பான அருங்காட்சியமாக இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பள்ளி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1853, அக்டோபர் 17) தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இது ஆங்கில வழி கற்றுத் தரும் பள்ளியாகவே செயல்பட்டது. தற்சமயம் பயன்பாட்டிலிருக்கும் பள்ளி 1875-ல் ஜூனாகத் நவாபால் கட்டப்பட்டு, எடின்பர்க் இளவரசர் நினைவாக ஆல்ஃபிரெட்டின் பெயர் சூட்டப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்குப்பின் மோகன்தாஸ் காந்தி உயர்நிலைப்பள்ளியென பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

Related