கருணை மதிப்பெண் தரலாமா? : அமைச்சர் ஜாவடேகர் விளக்கம்

 ''சி.பி.எஸ்.., பாடத்தேர்வில், கருணை மதிப்பெண்கள் வழங்குவது
தொடர்பான நடவடிக்கையில் மத்திய அரசு தலையிடாது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.


 பள்ளித் தேர்வில் மிகக் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டால், கருணை மதிப்பெண்கள் வழங்கும் நடவடிக்கையை கைவிடுவதென, சி.பி.எஸ்.., உள்ளிட்ட, 32 பள்ளி தேர்வு வாரியங்கள், கடந்த மாதம், ஒரு மனதாக தீர்மானித்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, டில்லி ஐகோர்ட், கருணை மதிப்பெண் வழங்கும் நடைமுறையை தொடரும்படி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.எஸ்.., மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிவுகள் மேலும் தாமதம் ஆகும் என்பதால், மேல் முறையீடு செய்யும் யோசனை கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, சி.பி.எஸ்.., பிளஸ் 2, தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கும் கொள்கையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தலையிடாது. எந்த மாற்றத்தையும், கல்வி ஆண்டுக்கு இடையில், திடீரென அமல்படுத்தக் கூடாது. இதுதொடர்பாக, கல்வி வாரியங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related