முன்னோர்களின் தியாகம்! பிளஸ் 2 தேர்வில் முதலிடத்தில் விருதுநகர் மாவட்டம்!

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில், தமிழகத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகள் முதலிடத்தைப் பிடித்து வந்தது விருதுநகர் மாவட்டம். 2014, 2016 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் 3-வது இடத்துக்குத்
தள்ளப்பட்டது. ஆனாலும், 2015-இல் விருதுநகர் மாவட்டத்துக்கே முதலிடம். இந்தக் (2017) கல்வியாண்டிலும் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று, முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்த மாவட்டம்.

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மனோகரன், “இந்த வெற்றிக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியப் பெருமக்கள், சிறப்பு பயிற்சி வகுப்புக்களை மாணவ, மாணவியருக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு நடத்தியதும், அதற்கு பெற்றோர் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளித்ததும், மாணவர்களின் ஆர்வமுமே காரணம்.” என்கிறார்.
விருதுநகர் மாவட்டத்துக்கும் இன்னும் பல சிறப்புக்கள் உண்டு. கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மாவட்டம் அல்லவாதமிழகத்தில் கல்விக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அதே நேரத்தில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோர்களின் கல்விக்கான அர்ப்பணிப்பை, இங்கே நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். 200 ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்குள் அனுமதி இல்லை.
கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தினராக இருந்தார்கள் நாடார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் உட்பட 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்களின் மார்பினை மறைப்பதற்கு அனுமதி கிடையாது. தீண்டாமை அந்த அளவுக்கு தலைவிரித்து ஆடியது. இந்து சமயத்தில், உயர்ந்த நிலையில் நாடார்கள் என்றுமே இருந்ததில்லை என்று முத்திரை குத்தினார்கள். கால்டுவெல்லும் கூட, ‘ஒடுக்கப்பட்ட ஜாதிகளில் மேல்தட்டைச் சேர்ந்தவர் என்றோ, மத்திய ஜாதிகளில் கடைத்தட்டைச் சேர்ந்தவர்கள் என்றோ தான் நாடார்களைச் சொல்ல முடியும்என்றார்.

தாங்கள் பட்ட வலியும், வேதனையும் தங்களது சந்ததியினருக்கும் தொடர்ந்துவிடக் கூடாது என்றெண்ணிய அந்த சமூகத்தினர், ‘கல்வி ஒன்றே மனிதனை உயர்த்தும்என்பதில் உறுதியாக இருந்தனர். விருதுநகரில் 1888-ஆம் ஆண்டு ஷத்திரிய வித்யாசாலா என்ற பெயரில் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்கள். அதற்கு இன்னொரு பெயரும் உண்டு. பிடி அரிசிப் பள்ளிக் கூடம் என்ற பெயரே பல ஆண்டுகளாக நிலைத்திருந்தது. ஏன் தெரியுமா? நாடார் சமுதாயத்தினர் ஒன்று கூடி தீர்மானித்தார்கள். விருதுநகரில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் நாள் தோறும் ஒவ்வொரு பிடி அரிசியை, தங்கள் பள்ளிக்கூடத்துக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றார்கள்

அதன்படி, விருதுநகரில் உள்ளவர்கள், தங்கள் வீட்டுத் தேவைக்கு அரிசி எடுக்கும் போது, அதில் ஒரு பிடி அரிசியை மகமைக்காக கலயங்களில் சேர்த்து வைத்தனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கிடைக்கும் இந்தப் பிடி அரிசியை விற்று, அதில் கிடைக்கின்ற மகமை நிதியை வைத்துப் பள்ளியை நடத்தினார்கள். வியாபாரிகளும் மகமை என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு தொகையை சங்கத்தில் சேர்த்தனர். அந்த நிதியையும் கல்விக்கே பயன்படுத்தினார்கள். காமராஜர் படித்ததும் கூட இந்தப் பள்ளிக்கூடத்தில்தான். அப்போது, அந்தப் பள்ளி அளித்து வந்த இலவச உணவுதான், பிற்காலத்தில் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது, அவர் மனதில் மதிய உணவுத் திட்டமாக உருவெடுத்தது

மதராசு மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கச் சொல்லி, உயிரை விட்ட போராளி சங்கரலிங்கனார் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது விருதுநகர் தேசபந்து மைதானத்தில்தான். தியாகங்களின் மூலமாக முன்னோர் அமைத்துத் தந்த அடித்தளத்தின் மீதே,  30-வது முறையாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்றிருக்கிறது விருதுநகர் மாவட்டம்


- சி.என்.இராமகிருஷ்ணன்

Related