23 கம்யூட்டர்கள்... ஏ.சி. வகுப்பறை... இன்வெட்டர்... மக்களைக் கவரும் கிராமத்து அரசுப் பள்ளி

அரசுப் பள்ளி
நீட் தேர்வு முதற்கொண்டு எல்லாவிதமான தேர்வுகளையும் எதிர்கொள்வதில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் திணறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவது உண்டு. அதிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் இன்னும் சிரமம்தான். எல்லோருக்குமான கல்வி சமமாக இங்கே இல்லை. பாடநூல் ஒன்றாக இருக்கிறது., பாடம் தாண்டிய கற்பிக்கும் முறை, உள்கட்டமைப்பு வேற்றுமை நிறைந்ததாக இருக்கிறது. காரணம் தனக்குத் தேவையான கல்வியை இயன்றவன் பெறுவதும் இல்லாதவன் எதிர்பார்ப்பதுமாகவே பல கனவுகள் விடியும் முன் கலைந்தே விடுகின்றன.

காமராஜர் காலத்தில் அரசுப் பள்ளிகள் எந்த நோக்கத்துக்குத் தொடங்கப்பட்டனவோ, அதை நிறைவேற்றுவதில் தற்போதைய ஆசிரியர்கள் பலரும் முனைப்போடு செயலாற்றுகின்றனர். அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களின் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் டெட் தேர்வுக்குப் பிறகு பணியமர்ந்த ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் முறையை முன்பிருந்த பாணியிலில் உள்ள நல்ல விஷயங்களையும் புதிய மாற்றங்களுடன் நல்ல முறையில் செயலாற்றி வருகிறார்கள். அதே போல் சமீப காலமாக பல புதிய முறை கற்றல் கற்பித்தல் முறைகளைப் பல்வேறு ஆசிரியர்களும் கையாண்டு வருகின்றனர். இது நம் அடிப்படைக் கல்வியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சியாகும்.
அரசுப் பள்ளி

இதுவரை, தமிழ்நாட்டில் எந்த அரசு நடுநிலைப் பள்ளியிலும் கம்யூட்டர் ஆய்வக வசதி என்பது இல்லை. (ஓரிரு கம்யூட்டர்கள் இருக்கக்கூடிய பள்ளிகள் இருக்கின்றன.) ஆங்கில வழியில் படிக்கக் கூடிய பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் யுகேஜி முடிப்பதற்குள், கணினி போன்ற அத்தியாவசிய தொழில்நுட்ப அறிவைப்பெறத் தொடங்கி விடுகிறார்கள். அரசு நடுநிலைப் பள்ளிகளில் மூன்று மடிக்கணினி மற்றும் கணினி தரப்பட்டு கற்றல் கற்பித்தலுக்கு பயன்படுத்துங்கள் என்று அரசே சொல்லும். ஆனால், பல பள்ளிகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பெரும் கேள்விக் குறி.

ஆக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கணினிப் பயன்பாடு எட்டாக்கனியாகவே இருந்தது. அந்த எட்டாக் கனியை எட்டும் கனியாக மாற்றி இருக்கிறார் கடலூர் மாவட்டம் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ப.வசந்தன்.

அது, பற்றி அவர் கூறுகையில், "எல்லா நடுநிலைப் பள்ளிகளுக்கும் அரசு மடிக்கணினியும் கணினியும் கொடுத்திருந்தாலும் அதைப் பராமரிப்பதற்கான செலவு, தொடர்ச்சியான பயன்பாடு என்பது இல்லாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு கணினி அறிவைத் தருவதில் சிக்கல் இருந்தது. இதற்கு ஒரே தீர்வு நம் பள்ளியில் கணினி ஆய்வகத்தை உருவாக்குவதுதான்.

தன்னிறைவுத் திட்டம் என்பது தமிழ்நாடு அரசின் திட்டங்களில் ஒன்றாகும். மூன்றில் ஒரு பகுதியை நாம் தந்தால் இரண்டு பகுதியை அரசாங்கம் நிறைவேற்றி விடும். ஆக, இந்தத் தன்னிறைவுத் திட்டத்தின் படி செயலாற்றலாம் என எண்ணினோம்.

அதன் படி என்னோட பள்ளித் தோழனிடம் பேசியபோது, அவர் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டத் தொகையை தந்தார். பின் அயல்நாட்டில் இயங்கி வரும் முழுமதி அறக்கட்டளை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டத் தொகையைத் தந்து உதவினர். அதை அப்படியே 1,69,000 ரூபாய்க்கு டி.டியாக மாற்றி தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினோம்" என ஆரம்பக் கட்டப் பணிகளை விளக்கினார்.

இதற்கடுத்து தமிழ்நாடு அரசும் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்காக உடனடியாக ஒதுக்கியது. மொத்தம் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் இப்போது 23 கணினிகள், 23 கணினி மேசைகள், 46 நாற்காலிகள், 3 பேட்டரி இன்வெர்ட்டர் என இணைய வசதியுடன் வரும் கல்வியாண்டு முதல் இயங்கத் தயார் நிலையில் இருக்கிறது அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கணினி ஆய்வகம்.
ஆசிரியர் வசந்த்
இதே போல, இன்ன பிற பள்ளிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முதன்முதலில் இதனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இதில் இன்னொரு பியூட்டி என்னன்னா., வசந்தன் ஆசிரியர் அடுத்த கல்வியாண்டில் வேறொரு பின்தங்கிய ஊருக்கு ஆசிரியராகச் செல்லப் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்திருக்கிறார்

மக்களைக் கவரும் பள்ளியாக இந்தப் பள்ளியை மாற்றினாலும், இங்கேயே தங்காது, அடுத்தப் பள்ளியை இப்பள்ளியைப் போல மாற்றும் எண்ணத்தில் இருக்கிறார் வசந்த். 'ஆசிரியர் பணி என்பது அறப் பணி; அதற்கு உன்னை அர்ப்பணி' என்பார்கள். அந்த வாக்கியத்துக்கு ஏற்ற வசந்த் போன்ற ஆசிரியர்களின் பணி தொடர்ந்து, தொய்வின்றி சிறக்கட்டும்.

Related