“இழுத்துமூட நினைத்த அரசுப் பள்ளியில் இன்று 180 மாணவர்கள்!” - தலைமை ஆசிரியையின் பெரு முயற்சி #VikatanExclusive

தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளிகள் சந்திக்கும் சவால்கள் மிகப்பெரியவை. தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால், மாணவர்களின் சேர்க்கையின்றி மூடப்படுவது ஆண்டுதோறும் வழக்கமான
நிகழ்வாகிவிட்டது. இதேபோன்ற ஒரு நிலையை சேலம், அம்மாப்பேட்டை பசுபல குருநாதர் தெருவில் இருக்கும் நகராட்சி துவக்கப் பள்ளிக்கும் நடக்க இருந்தது. ஆனால், தனது அர்ப்பணிப்பு மற்றும் சரியான திட்டமிடல் மூலம் அதை முறியடித்துள்ளார் ஒரு தலைமை ஆசிரியை.
 அரசுப் பள்ளி
1932-ம் ஆண்டிலேயே கட்டப்பட்ட பள்ளி இது. மானவர்களின் சேர்க்கை மெள்ள மெள்ள கரைந்து 2010-ம் ஆண்டில் ஐந்து குழந்தைகள் மட்டுமே இருந்ததால், இந்தப் பள்ளியை மூடிவிடும் எண்ணத்துக்கு வந்தது கல்வித் துறை. அப்படியான ஒரு சோக நிலையில் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்தார் கார்த்திகேயனி. இவரின் ஏழு ஆண்டுக்கால முயற்சியின் பலனாக, இப்போது 180 மாணவர்கள் படிக்கிறார்கள். சேலம் மாவட்ட துவக்கப் பள்ளிகளிலேயே அதிகம் மாணவர்கள் படிக்கும் பள்ளி என்ற பெருமையோடு, பள்ளிக் கல்வித் துறையின் காமராஜர் விருதைப் பெற்று கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பள்ளி. எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்? சொல்கிறார் கார்த்திகேயனி.

''குழந்தைகள், வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வாழும் பகுதிக்கு அருகிலேயே அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. குழந்தைகள் படிப்பை விடாமல் தொடர வேண்டும் என்பதற்காக, சீருடை, புத்தகம் என பல்வேறு நலத்திட்டங்களையும் அரசு வழங்குகிறது. ஆனால், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தால்தான் வாழ்வில் உயர்வார்கள் என்ற பெற்றோரின் தவறான எண்ணமே, அரசுப் பள்ளிகளை மூடும் நிலைக்கு எடுத்துச் செல்கிறது. முதலில், பெற்றோர் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, பள்ளிக்கு அருகில் வசித்த பெற்றோரை அழைத்து கூட்டம் நடத்தி அரசுப் பள்ளியின் செயல்பாட்டைப் புரியவைத்தேன்.

பள்ளியில் என்னென்ன மாற்றங்கள் வந்தால், உங்கள் குழந்தைகளை அனுப்புவீர்கள் என்று கேட்டேன். அரசு இலவசமாகத் தரும் சீருடையைப் பிடிக்கவில்லை என்றார்கள். பெற்றோர் மற்றும் தன்னார்வலர்களை இணைத்து வேறு வண்ணத்தில் சீருடை, டை எல்லாம் கிடைக்க ஏற்பாடு செய்தோம். ஹோம் வொர்க் டைரி, ஹேண்ட் ரைட்டிங் பயிற்சிப் புத்தகம் என தனியார் பள்ளிக்கு இணையான பயிற்சிகளை எங்கள் பள்ளியிலும் ஏற்படுத்தினோம். ஆர்.. வாட்டர், வகுப்பறையில் ரவுண்ட் டேபிள், ஹேண்ட் வாஷ், சுத்தமான டாய்லெட் வசதி என அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தோம். எங்களது முயற்சியைப் பார்த்து அரசு கல்வித் துறையின் நிதி திட்டம் மூலமும் உதவி கிடைத்தது. கூடுதல் வகுப்பறைகளையும் கட்டினோம்.
ரோட்டரி, ஜேசீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகள், கணினி வசதியைச் செய்துகொடுத்துள்ளன. ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி வகுப்புகளும் வாரத்தில் இரண்டு நாட்கள் வழங்குகிறோம். மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த வாரம் ஒரு வகுப்பு உள்ளது. அதில், மாணவர்கள் தங்களது திறமைகளைத் தயக்கம் இன்றி வெளிப்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆலோசனைகளை வழங்குகிறோம். மாணவர்களின் பிறந்தநாளை பள்ளியில் கொண்டாடுகிறோம். ஆண்டு விழா, அறிவியல் கண்காட்சி என அத்தனை விழாக்களையும் நடத்துகிறோம். பள்ளிக்கு விடுப்பு எடுக்காமலும், தவறாமல் சீருடை அணிந்து வரும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டுகிறோம். பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தை தவறாமல் நடத்தி விவாதிக்கிறோம்.
 அரசுப் பள்ளி

தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களை இப்போது எங்கள் பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்கள். இப்போது பெற்றுள்ள காமராஜர் விருது, எங்களை இன்னும் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். தன்னார்வ அமைப்புகள் பலவும் எங்கள் பள்ளிக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தேவையான வசதிகளை ஆர்வமுடன் செய்ய முன்வருகிறார்கள். நாம் ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பித்து வைத்தால், பல கரங்கள் தானாக முன் வந்து பலம் சேர்க்கும் என்பதற்கு உதாரணம் இது'' என்கிற கார்த்திகேயனி குரலில் மிளிர்கிறது பெருமிதம்.

Related