பிளஸ் 1 பாடம் படிக்காததால் இன்ஜி., தேர்வில் 22 சதவீதம் பேர் தோல்வி

'பிளஸ் 1 பாடம் படிக்காததால், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல்
செமஸ்டரில், 22 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவதில்லை' என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்ஜி., கல்லுாரிகளில், ஏப்ரல் செமஸ்டர் தேர்வுகளுக்கு விடை திருத்தம் நடந்து வருகிறது. சென்ற ஆண்டு, பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்று, இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து, டிசம்பரில் முதல் செமஸ்டர் தேர்வை எழுதினர். இதில், கணித பாடத்தில் மட்டும், 22 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.தோல்வி அடைந்தோர் பட்டியலில், அரியலுார் மாவட்ட இன்ஜி., கல்லுாரி மாணவர்கள், முதலிடத்தில் உள்ளனர்.


பிளஸ் 2 தேர்வில், இந்த ஆண்டு, முதலிடம் பெற்ற விருதுநகர் மாவட்டத்திலும், 12 சதவீதம் பேர், தோல்வி அடைந்துள்ளனர். பிளஸ் 2வில், மாநிலம் முழுவதும் அதிக மதிப்பெண் பெறும், 'டாப்' மாணவர்கள், பெரும்பாலும், சென்னையிலுள்ள அண்ணா பல்கலை உள்ளிட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர்கின்றனர். அவர்களிலும், 13.27 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.டாப் மாணவர்கள், இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் கல்லுாரிகள் கொண்ட, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20 சதவீத மாணவர்கள், முதல் செமஸ்டர் தேர்வில், தோல்வி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், இன்ஜி., மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர, பிளஸ் 2 மதிப்பெண் மட்டுமே, கணக்கில் எடுக்கப்படுகிறது. இதனால், அரசு பள்ளிகளும், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், பிளஸ் 1 வகுப்பிலும், பிளஸ் 2 பாடத்தை நடத்துகின்றன. பிளஸ் 1 பாடம் தெரியாமல், இன்ஜினியரிங் வரும் மாணவர்களில், பெரும்பாலானோர், முதல் செமஸ்டர் தேர்விலேயே, தோல்வி அடைவது தெரிய வந்துள்ளது.

Related