‘எங்கே போனார் மைதிலி ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்?!' - உதயசந்திரன் கடுகடு; கதிகலக்கும் கல்வித்துறை ஊழல் #VikatanExclusive

எங்கே போனார் டெக்ஸ்ட் புக் கார்ப்பரேஷன் எம்.டி?' - கடந்த சில நாள்களாக பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் இயங்கும் டி.பி.ஐயில், இந்தக் கேள்வியைக் கடக்காமல் யாரும் சென்றுவிட முடியாது

பள்ளிக் கல்வித்துறை வளாகம்
'பள்ளிக் கல்வித்துறையின் செயலராக உதயசந்திரன் ..எஸ் பொறுப்பேற்றதில் இருந்து கல்வித்துறையை சீரமைத்து வருகிறார். ' துறையில் என்னதான்
செய்தீர்கள்?' என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், விடுப்பில் இருக்கிறார் பாடநூல் கழக எம்.டி மைதிலி ராஜேந்திரன்' என்கின்றனர் கல்வி அதிகாரிகள்.

பள்ளிக் கல்வித் துறை அலுவலங்களில் மிக முக்கியமானது தமிழ்நாட்டு பாடநூல் கழக நிறுவனம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணி, விலையில்லா புத்தகப் பை, பாடநூல், கிரேயான்ஸ் தொடங்கி உல்லன் சுவெட்டர்கள் வரையில் வழங்குவது இந்த நிறுவனம்தான். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தங்களை இந்தத் துறை கையாள்கிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தகப் பையோ, காலணியோ முறையாக வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடித்திருக்க வேண்டிய ஒப்பந்தப் பணிகளும் முடிவுக்கு வரவில்லை. "பள்ளிக் கல்வித்துறையின் செயலராக ஆறு ஆண்டுகளுக்கும் மேல் பதவியில் இருந்தார் சபீதா ..எஸ். இவருடைய பதவிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர் மைதிலி ராஜேந்திரன். துறை செயலரின் ஆசிர்வாதம் இருந்ததால், சொந்தக் கம்பெனி போல பாடநூல் கழகத்தை மாற்றிவிட்டார். புதிய செயலராக உதய சந்திரன் பொறுப்பேற்ற நாளில் இருந்து, பாடநூல் கழகத்தை கண்காணிக்க ஆரம்பித்தார். இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்த அத்தனை முறைகேடுகளும் கண்டறியப்பட்டுள்ளன" என விளக்க ஆரம்பித்தார் பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர்.
"அரசின் இலவச காலணி திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 70 லட்சம் மாணவர்கள் பலனடைகிறார்கள். இதற்காக, 120 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இலவச புத்தகப் பைக்கும் 100 கோடி ரூபாய் வரையில் ஒதுக்கப்படுகிறது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு வேலைகளைப் பிரித்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டு பிரபலமான அந்த செருப்பு கம்பெனி எல் 1 ஆக தேர்வானது. ஆனால், அந்தக் கம்பெனி செருப்பின் தரம் பற்றி CFTI (Central Footwear Training Institute) கேள்வி எழுப்பியதால், 'எங்கே டெண்டர் கிடைக்காமல் போய்விடுமோ?' எனப் பயந்துபோய், இந்தப் பிரச்னையை செயலர் சபீதா ..எஸ் கவனத்துக்குக் கொண்டு போனார்கள் பாடநூல் கழக அதிகாரிகள். இதையடுத்து, டெண்டரையே கேன்சல் செய்துவிட்டு, மறு டெண்டருக்கு உத்தரவிட்டார் சபீதா. இதனால் ஏற்பட்ட காலதாமதம் பற்றியெல்லாம் அதிகாரிகளுக்குக் கவலை ஏற்படவில்லை. மறு டெண்டர் என்ற பெயரில் மக்கள் வரிப்பணமும் விரயமானது. பிரபல நிறுவனத்தின் தரம் பற்றி கேள்வி எழுந்தபோதே, அதற்கு அடுத்த நிறுவனங்களுக்கு வேலை கொடுத்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு மேலும் மேலும் இந்த அதிகாரிகள் தவறு செய்தனர்.

மைதிலி ராஜேந்திரன்
'பிரபல செருப்பு கம்பெனிக்கே தகுதி குறைவு' எனச் சொன்ன சி.எஃப்.டி. நிறுவனத்தைக் கழட்டிவிட்டுவிட்டு, சி.எல்.ஆர்.. எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தரப் பரிசோதனை நடத்தும் வேலையைக் கொடுத்தனர் அதிகாரிகள். 'பி.வி.சி. செருப்புகளுக்கு தோல் ஆராய்ச்சி நிறுவனம் எப்படி சோதனை நடத்தும்?' என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை. 120 கோடி ரூபாய்க்கு மறு டெண்டர் அறிவித்த நேரத்திலேயே, தரப் பரிசோதனை நிறுவனங்களுக்கான டெண்டரும் நடந்தது. டெஸ்டிங் ஏஜென்சி என்ற அடிப்படையில், மத்திய அரசின் FDDI (Footwear development and design institute) என்ற நிறுவனம் தேர்வானது. ஆனால், 'FDDI நிறுவனம் தங்களுக்குச் சாதகமாக இருக்காது' என்பதால், டெண்டரில் கலந்து கொள்ளாத, சி.எல்.ஆர். நிறுவனத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர். செருப்பை பரிசோதனைக்கு உட்படுத்தும்போது, பத்தாயிரம் ஜோடிகளுக்கு மூன்று ஜோடி செருப்புகளை சேம்பிள் எடுப்பார்கள். ஒரு நாளைக்கு இரண்டு ஜோடி செருப்புகளுக்குப் பரிசோதனை என்று எடுத்துக் கொண்டால்கூட, 70 லட்சம் செருப்புகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படும். ஆனால், வெறும் 18 நாள்களில் மொத்த பரிசோதனையையும் முடித்துவிட்டார்கள்.

உதயசந்திரன்செருப்புகளின் தரத்துக்கு மட்டும் 21 வகையான சோதனைகள் நடத்துவார்கள். ஆனால், அவசர, அவசரமாக வேலையை முடித்துவிட்டு பணத்தை எடுக்கும் நோக்கில் உயர் அதிகாரிகள் இருந்துள்ளனர். அதேபோல், 70 லட்சம் புத்தகப் பைகளுக்கான டெண்டரில் கடந்த ஆண்டுகளில் ஏவான், சைன் பிளாஸ்ட், எம்.பி. ரப்பர், ஜெம் ஆப்செட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 'முதல் இரண்டு கம்பெனிகளுக்கு போதிய தகுதி இல்லை' என்கிறார்கள். 120 கோடி மதிப்புள்ள புத்தகப் பை வேலைகளில் 90 சதவீதம் அளவுக்கு இந்த நிறுவனங்கள்தான் எடுத்துச் செய்தனர். எம்.பி. ரப்பரும், ஜெம் நிறுவனமும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புத்தகப் பை தயாரித்து வந்தார்கள். இவர்களுக்கு பத்து சதவீத அளவுக்கு வேலையைக் கொடுத்து அதிகாரிகள் சமரசம் செய்துவிட்டனர். 90 சதவீத வேலைகளை எடுத்து செய்து வரும் நிறுவனங்களின் தகுதியைப் பற்றியும் அதிகாரிகளுக்குக் கவலை இல்லை. 'இவர்களுக்கு வேலையைக் கொடுத்ததன் பின்னணியில் எந்த ஆலோசகர் இருந்தார்?' என்பதும் சபீதாவுக்குத் தெரியும். இவை அனைத்தும் மைதிலி ராஜேந்திரனின் இசைவோடுதான் நடைபெற்றது. இவர்களின் செயலால், பெரும்பாலான அரசுப் பள்ளிகளுக்குக் காலணியும் புத்தகப் பையும் சென்று சேரவில்லை" என ஆதங்கத்தோடு முடித்தார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் இருந்த நேரத்தில், ‘தங்களுக்கு சரிப்பட்டு வர மாட்டார்' என்ற காரணத்துக்காக முன்னாள் அமைச்சர் வளர்மதியை பாடநூல் கழகத் தலைவராகக் கொண்டு வந்தனர் அதிகாரிகள். பன்னீர்செல்வம் அணியை நோக்கிப் பாண்டியராஜன் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. பாடநூல் கழகத்தில் தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார் மைதிலி ராஜேந்திரன். துறைக்கான தணிக்கையை இன்னும் முடிக்காமல் வைத்துள்ளார். சொந்த அலுவலுக்காக மட்டும் ஐந்து உதவியாளர்களை அரசு செலவில் பயன்படுத்தி வருகிறார். அண்மையில், அவரை அழைத்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயசந்திரன், ' உங்கள் துறையில் பல பணிகள் நிலுவையில் இருக்கின்றன. மாணவர்களுக்கு சென்று சேர வேண்டிய திட்டங்களில் ஏன் இவ்வளவு தாமதம்?' எனக் கண்டிப்புடன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தினம்தினம் துறைச் செயலர் கேள்வி எழுப்பியதால், நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். எப்போது வருவார் என்றும் தெரியவில்லை" என்கிறார் பாடநூல் கழக அதிகாரி ஒருவர்.
உதயசந்திரன்

தமிழ்நாட்டு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி ராஜேந்திரனைத் தொடர்பு கொண்டோம். அவரது எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அலுவலக எண்ணைத் தொடர்பு கொண்டபோது, " மேடம்...மத்திய அரசுப் பணிக்காக விண்ணப்பித்திருக்கிறார். அதற்கான பணிகளுக்காக மும்பை வரையில் சென்றிருக்கிறார். அரசின் அனுமதியோடுதான் விடுப்பு எடுத்திருக்கிறார்" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/87805-where-is-mythili-rajendran-ias---tamilnadu-textbook-corporation-corruption.html
Related