பள்ளிக் கல்வியைச் சீரமைக்க மே 2-இல் ஆலோசனைக் கூட்டம்

பள்ளிக் கல்வியைச் சீரமைக்கும் நோக்கில், அமைச்சர் கே..செங்கோட்டையன் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை
(மே 2) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி, தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் எம்.அதிகமான் முத்து உள்ளிட்டோர் கூறியது:
சென்னையில் மே 2 -இல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், நிதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது.

மாறாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், பணியாளர் மற்றும் பள்ளிக்கல்வி துறையின் வளர்ச்சியை மேம்படுத்துதல் குறித்து அரசிடம் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
புதிய பாடத் திட்டங்கள்: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது, புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக ஆசிரியர்களிடம் கருத்து கேட்க வேண்டும், உயர்நிலைப் பள்ளிகளில் தனியாக கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும், பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் உள்பட 35 முக்கிய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
கூட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களில் இருந்து மூன்று பொறுப்பாளர்களும், பதிவு பெற்ற (அங்கீகாரம் பெறாத) சங்கங்களில் இருந்து இரண்டு பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளலாம்

எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related