லஞ்சம் வாங்கினால் பணி நீக்கம்; கேரள அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

திருவனந்தபுரம் : 'லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கேரள
அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. அரசு துறைகளில், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு உள்ளதாக, அம் மாநில உள்துறை அமைச்சர் ஜலீல் கூறினார்.

அவர் கூறியதாவது: மக்களுக்கு இலவச சேவை செய்வதாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கருதுகின்றனர். மக்கள் அளிக்கும் வரிப் பணத்தில், சம்பளம் பெறுபவர்கள் தான் அவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர்.

அதனால் தான், வேலை பார்ப்பதற்கு லஞ்சம் கேட்கின்றனர்; இதை ஒழிப்பது தான் அரசின் லட்சியம். லஞ்ச ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்து கண்துடைப்பு ஏற்படுத்தும் முறை மீது நம்பிக்கை இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனே பணியில் இருந்து நீக்கிவிட முடிவு செய்துள்ளோம்.


அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஜாதி மற்றும் மதம் தடையாக இருக்காது. இதை எல்லாம் முன்வைத்து, குற்றவாளிகளை காப்பாற்ற நினைத்தால், அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related