தமிழகம் எதிர்த்தும் பலனில்லை.. நெல்லை, நாமக்கல், வேலூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கிறது மத்திய அரசு

ஏற்கனவே நாடு முழுக்க 80 நகரங்களில் நீட் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இம்முறை, மாணவர்கள் பலன்பெற மேலும் 23
நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 103 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது

டெல்லி: தமிழகத்தில் நெல்லை உட்பட 3 நகரங்களில் நீட் நுழைவு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து, கேட்டுக்கொண்டார்.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. பாஜக தவிர தமிழகத்தின் அனைத்து கட்சிகளுமே நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் நெல்லை, நாமக்கல், வேலூர் ஆகிய நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இன்று தெரிவித்தார்.
டிவிட்டரில் அவர் இதுகுறித்து கூறுகையில், ஏற்கனவே நாடு முழுக்க 80 நகரங்களில் நீட் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இம்முறை, மாணவர்கள் பலன்பெற மேலும் 23 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 103 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையே, நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தமிழகத்தில் புற்றீசல் போல பெருகியுள்ளன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டும் கடந்த ஆண்டு சில நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டன. இந்த ஆண்டு சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங் களிலும் பயிற்சி மையங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related