இனி கோலா பானங்களை விற்க மாட்டோம்..!' தியேட்டர் உரிமையாளர்களின் அதிரடி

ன்று முதல் எங்கள் தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் போன்றவற்றை விற்க
மாட்டோம் என முடிவு செய்துள்ளோம் என்கிறார் ராமநாதபுரம் D சினிமாஸ் உரிமையாளர் தினேஷ் பாபு.
தியேட்டர்
கடந்த நான்கு நாட்களாக என் தமிழ் இனம், தன் உரிமைக்காக போராடிக்கொண்டு இருக்கிறது. நானும் அவர்களோடு களத்திலிருந்து நேரடியாக  மாணவர்களின் போராட்டங்களைப் பார்த்து வருகிறேன். ஜல்லிக்கட்டுக்காக ஒலித்த அவர்களது கோஷம் படிப்படியாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராக மாறிவருவதையும் கவனித்தேன். இன்றைய இளைஞர்களின் தெளிவான அரசியல்  கோஷங்கள் எனக்குள்ளேயும் சில மாற்றங்களை உண்டாக்கியது. இவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக என்னால் இயன்ற என் பங்களிப்பையும் செய்ய முடிவெடுத்தேன். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்றிலிருந்து பெப்சி, கோக் விற்க மாட்டோம் என்ற இந்த முடிவை இன்று முதல் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
இனிமேல், பவண்டோ,டொரினோ போன்ற உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே விற்க முடிவெடுத்துள்ளோம். இளநீர் போன்ற இயற்கை பானங்களை தியேட்டருக்குள் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம். பத்து முதல் பதினைந்து நிமிட இடைவேளைக்குள் இதனை எப்படி சாத்தியப்படுத்துவது அல்லது உடனடி பானமாக  அருந்துவதற்கு ஏற்ற மாதிரி  இளநீரை மாற்றித்தர யாரேனும் முன்வந்தால் அதனையும் நடைமுறைப்படுத்தத் தயாராக இருக்கிறோம். மேலும் பாப்கார்ன் போன்ற பொருட்களில் வெளிநாட்டு தயாரிப்புகளையும் நிறுத்திவிட்டு அதற்கு இணையான உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்த பரீசிலித்து வருகிறோம்.
படிப்படியாக ,வெளிநாட்டு தயாரிப்புகளை முற்றிலுமாக நிறுத்த முடிவெடுத்துள்ளதற்கு, ரசிகர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு  இருக்கிறது என்றும் இந்த இளைஞர் சக்தி புது வரலாறு படைப்பார்கள் எனவும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
மகிழ்ச்சி!

Related