TAM-NEWS

'ஜல்லிக்கட்டு' தடை நீக்க அவசரச் சட்டம் மட்டுமே தீர்வாகுமா?

ஜல்லிக்கட்டு jallikkattu

ல நூறு ஆண்டுகளாக நாம் தவறாமல் நடத்தி வந்த ஜல்லிக்கட்டு, தற்போது சில அமைப்புகளால் தடை செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது அவசரச் சட்டம் பிறப்பித்து, ஜல்லிக்கட்டை நடத்தலாம்
என்ற கருத்து மேலோங்கி இருப்பதை காண முடிகிறது.
"ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்துவதற்குரிய அவசர சட்டத்தினை கொண்டு வரக்கூடிய ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளேன். சட்ட முன்வடிவுகள் மத்திய அமைச்சரவைகளின் ஒப்புதலையும், குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்று, உரிய சட்டத்திருத்த அவசர சட்டமாக பிறப்பிக்கப்படும். உறுதியாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். வாடிவாசல் விரைவில் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டுக் காளைகள் துள்ளிக்குதித்து வரும்" என்றார் தமிழகத்தின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஜல்லிக்கட்டு நடக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் இந்த அவசரச் சட்டம் மட்டுமே நமக்கு பலனளிப்பதாக இருக்காது என்பது தான் இப்போதைய மிகப்பெரிய சிக்கல். அப்படி என்ன என்ன சிக்கல் என தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஜல்லிக்கட்டுக்கு நடப்பதற்கு எப்படி இந்த பிரச்னை வந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டு jallikkattu

ஜல்லிக்கட்டு தடை எப்படி வந்தது தெரியுமா?
ஜல்லிக்கட்டுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்பது தெரியுமா?. அதற்கு பல காரணங்கள் எல்லாம் இல்லை. ஒற்றை காரணம் தான். காட்சி விலங்குகள் பட்டியலில் காளை மாட்டை சேர்த்தது தான் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கான காரணம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், காளை மாடுகளை 2011 ஜூலை 11-ம் தேதி, காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்தார். அதாவது சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு ஆகிய வனவிலங்குகள் இடம்பெற்ற அந்த பட்டியலில், காளைகளையும் சேர்த்தனர்.
இதையடுத்து வனவிலங்குகள் பாதுகாப்புச்சட்டம் காளைகளுக்கும் அமலானது. அதாவது இந்த விலங்குகளை பழக்கப்படுத்தி, பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்க வைப்பதோ, காட்சிப்படுத்தவோ கூடாது என்ற உத்தரவும் அமலானது. இதை அடிப்படையாக வைத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம். தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் நாம் முறையிட்ட போதும், தடை நீங்காமல் போனதற்கு காரணம் இது தான்.
காளையை காட்சிப்படுத்துதல், அவற்றை போட்டிகள் மற்றும் கண்காட்சிகளில் பயன்படுத்துதல் போன்றவை தடை செய்யப்பட, வன விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டப்பிரிவுகளே காரணமாக இருந்தன. இப்போது அந்த சட்டங்கள் அப்படியே தான் இருக்கின்றன. காளையும் இந்த காட்சி விலங்குகள் பட்டியலில் அப்படியே இருக்கிறது.
ஜல்லிக்கட்டு jallikkattu

வை சட்ட திருத்தம்...
2011ம் ஆண்டு காட்சி விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட உடன் சிக்கல்கள் துவங்கி விட்டன. அப்போதே விலங்கு ஆர்வலர்கள், பிராணிகள் நல வாரியம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி துவங்க ஆரம்பித்தது. ஆனால் அப்போதெல்லாம் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி, அதைக்காரணம் காட்டி தான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினோம். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் நம்மிடம் இருந்தது. ஆனால் நம் பதில்களுக்கு காத்திராமல் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த முடியாமல் செய்தனர். அதற்கு அப்போது காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் இருந்தது தான் காரணம். காளைகள் மட்டும் காட்சி விலங்குகள் பட்டியலில் இல்லை என்றால்... என கேட்கிறீர்களா? எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் ஜல்லிக்கட்டை நடத்த முடியும்.  நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது.
ஜல்லிக்கட்டு jallikkattuஅப்படியானால் அவசரச் சட்டம் இதற்கு பலனளிக்காதா என கேட்கிறீர்கள். நிச்சயம் பலனளிக்காது. 2011ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் 3 ஆண்டுகள் நாம் ஜல்லிக்கட்டை நடத்துவதே பெரும்பாடாக போனது.
அவசரச் சட்டம் கொண்டுவரலாம். உச்சநீதிமன்றத்தில் அதைக் காட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம். ஆனால் இது தற்காலிக தீர்வாகத்தான் அமையும். அவசரச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளை, விதிமுறைகளை முறையாக வகுத்து, ஒழுங்குபடுத்தி கனக்கச்சிதமாக நடத்தினாலும், காட்சி பட்டியலில் காளைகள் இடம்பெற்றுள்ளதை காரணம் காட்டி, பிராணிகள் நல வாரியத்தினர் அங்கு வருவார்கள். ஆய்வு செய்வதாக சொல்வார்கள். அவர்களை நாம் தடுக்க முடியாது.
ஆய்வை முடித்து விட்டு, வழக்கம் போல் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்பார்கள். மக்களின் மகிழ்ச்சிக்காக காளைகள் போட்டியில் இறக்கி விடப்பட்டு அவதிப்படுத்தப்படுவதாக சொல்வார்கள். மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வரும். இவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது தான். நாம் சொல்வதை அவர்கள் செவிமடுத்து கேட்கவே இல்லை. கேட்கவும் மாட்டார்கள். இது இப்போது மீண்டும் நடக்கும்.
எனவே அவசரச் சட்டம் என்பது இப்போதைக்கு ஜல்லிக்கட்டை நடத்த வழி செய்யுமே தவிர, தொடர்ந்து நாம் ஜல்லிக்கட்டை நடத்தவும், நிரந்தரமாக எந்த தடையும் இல்லாமல் நாம் ஜல்லிக்கட்டை நடத்தவும் பலன் தராது. அதற்கு காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்பட வேண்டும். அதற்கான சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அவசரச்சட்டம் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். நிரந்தர தீர்வை அல்ல

Related