TAM-NEWS

சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதல்வர் ஓ.பி.எஸ்.

சென்னை: இன்று மாலை 5 மணிக்கு கூடிய தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில், ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கமாக ஆளுநர் உரை முடிந்ததும் அன்று பேரவை ஒத்தி வைக்கப்படும். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் உள்ளதால் இன்று மாலை சிறப்பு
அமர்வு ஏற்பாடு செய்ய சட்டசபை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்திருந்தது. மாலை 5 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டம் ஆரம்பித்தது.
முதல்வர் பன்னீர்செல்வம் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து அதன் மீது உரையாற்றி வருகிறார் பன்னீர் செல்வம். பிற தலைவர்களும் மசோதா மீது உரையாற்ற உள்ளனர். இதன்பிறகு ஒரு மனதாக சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
முன்னதாக, மதியம், சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கோ.சி.மணி உள்ளிட்ட மறைந்த தலைவர்கள் மறைவுக்கு நாளை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்படும். 27, 30 மற்றும் 31ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும். பிப்ரவரி 1ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பேசுவார். அன்றே சட்டசபை தொடர் முடிவடையும் என்றார்.

Related