TAM-NEWS

’விசாரணை’ வெற்றிமாறன் இயக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு கதை இதுதான்! - வாடிவாசல்

58 ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்ட ஒரு புத்தகம் தற்போதைய அரசியல் சூழலின் கருவாகப் பேசப்பட சாத்தியம் உண்டா?. தமிழகத்தில்
அரசுக்கும் பீட்டாவுக்கும் இடையேயான ஜல்லிக்கட்டுப் பிரச்னை தற்போது மக்களுக்கும் பீட்டாவுக்கும் இடையிலான போராக உருவெடுத்துள்ளது, ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் மனிதர்கள் மாடுகளைக் கேவலமாக நடத்துகிறார்கள் என்று குறை கூறும் பீட்டாவிடம், மாடு எங்கள் நண்பன், எங்கள் வீட்டில் ஒருவன். அதற்கும் எங்களுக்குமான உறவு தமிழுக்கும் உணர்வுக்குமான உறவு. இதற்கான ஒரு தமிழ் இலக்கிய அத்தாட்சியமாக இருக்கும் ஐம்பதெட்டு வருட கால ஆவணம்தான் சி.சு.செல்லப்பா எழுதியவாடிவாசல்’. ஜல்லிக்கட்டு ஏன் தடைசெய்யப்படக் கூடாது என்பதின்பால் உள்ள அரசியல் உட்பட பல அறிவியல் ரீதியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் ஏறுதழுவுதலில் மாட்டுக்கும் மனிதனுக்குமான உறவு எவ்வாறான மேன்நிலையை அடைகிறது என்பதைதான் இந்தவாடிவாசல்பேசுகிறது.
மதுரை, ராமநாதபுரம் பகுதி வாழ் மக்களிடையே பலநூறு தலைமுறைகள் தாண்டி புழக்கத்தில் இருப்பதுஜல்லிக்கட்டு’. மதுரை வாடிவாசலில் வருடாந்திர ஏறு தழுவுதல் போட்டி நடைபெறுகிறது.அதில் தன் அப்பனை கொம்பால் முட்டிக் கொன்ற காரி என்னும் காளையை அடக்க களமிறங்கத் திட்டமிடுகிறான் பிச்சி. ’காரிமற்றவற்றைப் போல சாதாரணக் காளை அல்ல. ஜமீன்தார் வீட்டுக் காளை ஜல்லிக்கட்டுக்கெனவே கொம்பு சீவி வளர்க்கப்பட்டது. தனது அப்பா ஏற்கனவே அந்தக் காளையால் முட்டப்பட்டு உயிரிழந்தவர் என்றும் அவர் அந்த வட்டாரத்தில் ஏறு தழுவுதலில் பெரும் கெட்டிக்காரர் என்றும் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கிறது, அவர்கள் பிச்சி, காளையைப் பழிவாங்கக் களமிறங்குவதாகத்தான் பார்க்கிறார்கள்.ஆனால் பிச்சிக்கு அது அப்படியில்லை. காளையை வெற்றி கொள்ளவேண்டும், தன் தந்தையின் இறப்பின் மீது இருக்கும் கறையை அகற்றவேண்டும் அவ்வளவே. காளையைக் களத்தில் சந்திக்கிறான் பிச்சி. களத்தில் ஒருவனது செயல்பாடுகளை அவனது எதிரியின் அசைவுகளே தீர்மானிக்கிறது. அதுபோலவே பிச்சி காளையின் உடல் அசைவுகளைப் படிக்கிறான். காரியின் நகர்வுகளுக்கு ஏற்ப அவனது நகர்வும் அமைகிறது. ஜமீன்தாருக்கு பிச்சி யாரென்பது தெரியவருகிறது. அவன் எப்படியும் தனது காரியை அடக்கிவிடுவான் என்பதையும் அவனது உடல் அசைவுகளில் இருந்து விளங்கிக் கொள்கிறார். ’காரிதான் அவருடைய மதிப்பு மரியாதை அதிகாரம் அந்தஸ்து அனைத்துமே. காரியை பிச்சி அடக்கிவிடும் சூழலில் ஜமீன்தார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை முழுக்க முழுக்க ஒரு ஜல்லிக்கட்டுக் களத்தின் கதையாக விவரிக்கிறார் செல்லப்பா. தமிழில் காளைகளுக்கும் மனிதனுக்குமான உறவினை விவரிக்கும் படைப்புகளில்கமலாம்பாள் சரித்திரத்தை அடுத்து செல்லப்பாவின்வாடிவாசல்பேசப்படுகிறது.
முதல் பதிப்பின் முன்னுரையில் இப்படியாகக் கூறுகிறார் செல்லப்பா,”அந்த வாடிவாசலில் மனுஷ ரத்தம் சிந்தலாம்.காளை உடலில் ஒரு சொட்டு ரத்தம் காணக்கூடாது. எதன் கை ஓங்குதோ அது தான் தூக்கும். மனுசன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்துக்கு அது விளையாட்டல்ல. அதுதான் ஜல்லிக்கட்டுஎன்கிறார். காரிக்கு, அந்த காளைக்கு அது விளையாட்டல்ல. அதைப் பொறுத்தவரையில் அதன் எதிரில் நிற்பவனும் காளையே. அவனை தனது பிம்பமாகத்தான் காளை பார்க்கும். காளை மனிதன் என்கிற துருவங்களைத் தாண்டி இது அதிகாரம், சாதியம் ஆகியவற்றின் மீதான எதிர்ப்புகளை ஓங்கிடச் செய்யும் களமாகவும் வாடிவாசல் அமைகிறது. பிச்சி வேறு சாதி, ஜமீந்தார் சாதியப் படிநிலைகளில் உயர்வில் இருப்பவர். பிச்சி காளையை வென்றுவிட்டால் அதிகாரத்தை வென்றுவிட்டதாகத்தான் பொருள். அவன் அதிகாரத்தை வென்று விடுகிறான். ஆனால் வெற்றியானது அவனுக்கு துரோகம் ஏளனம், சதிச்செயல்கள் என அனைத்தையும் தாண்டித்தான் கிடைக்கிறது. இறுதியில், ஜல்லிக்கட்டு பிச்சியின் ஆயுதமாகவே மாறிவிடுகிறது.
இந்தப் புத்தகத்தின் ஆறாம் பதிப்புக்காக முன்னுரை எழுதிய எழுத்தாளர் பெருமாள்முருகன் அதன் முடிவில் இப்படிச் சொல்லிச் செல்கிறார்,”ஜல்லிக்கட்டை மிருக வதை என்றும் காட்டுமிராண்டி விளையாட்டு என்றும் விமர்சிக்கும் ஜீவகாருண்ய அமைப்புகள். ஜல்லிக்கட்டை வெவ்வேறு தளங்களில் வைத்துப் பார்க்கும் வாடிவாசல் நாவலை ஒரு முறையேனும் வாசித்துப் பார்க்க வேண்டும்என்கிறார். பெருமாள்முருகன் கூறுவது போல அவர்களை இதைப் படிக்கச் செய்யலாம். ஆனால் ஜல்லிக்கட்டில் ஆண்டாண்டுகளாகத் தொடரும் சாதியப் படிநிலைகளை அகற்றி வெல்லுபவனும் தோற்பவனும் களத்தில் இறங்கி உழும் உழைப்பாளி மட்டுமே எந்தச் சாதியினனும் இல்லை என்கிற கண்ணோட்டத்தில் ஏறுகளைத் தழுவினால்தான் பீட்டாவுக்கும் எதிராகவும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் வெற்றி பெற்றதாகும்.
வாடிவாசலில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. காளைகள் மனிதர்களாகிறார்கள். உழவுக் களத்தில் உழைத்த இருநண்பர்கள் மண்புரள ஆடும் களியாட்டம் அது. அவர்களுக்கு சக மக்கள் அளிக்கும் மதிப்பும் மாண்பும் தவிர்த்து அரசும் சட்டமும் அங்கே தேவையில்லை.
--

நன்றி-விகடன் 🌺

Related