TAM-NEWS

பணம் மாற்றுபவர்களுக்கு அடையாள மை: சக்தி காந்ததாஸ் பேட்டி

 டெல்லியில் பொருளாளதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கருப்பு பணம்
டெபாசிட் செய்யப்படுகிறதா என்பது குறித்து வருவாய், அமலாக்கத் துறையால் கண்காணிக்கப்படும். வங்கிகளில் ஒருவரே பலமுறை பணம் எடுக்கும் முயற்சியை தடுக்க விரலில் மை வைக்கப்படும். இணையதளம் மூலமான வங்கி பரிவர்த்தனைகளை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக வங்கிகளுக்கு சரியான அளவில் ரொக்கப் பணம் அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டு பற்றாக்குறை என்று சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

அனைத்து வகை பண பரிவர்த்தனைகளும் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜன்தன் கணக்குகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

வங்கிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக சில மக்கள் விரோத சக்திகள் குழப்பதை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.


அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்கிற தகவலில் துளி அளவு கூட உண்மையில்லை. நாட்டில் போதுமான அளவு உப்பு இருப்பு உள்ளது. பொதுமக்கள் வீண் வதந்தியை நம்ப வேண்டாம். இவ்வாறு கூறினார்.

Related