மூன்று
ஆண்டுகளாக, சான்றிதழ் சரிபார்க்காமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மூன்று
ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தகுதி
தேர்வின் மூலம், நியமிக்கப்பட்ட
பட்டதாரி
ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகள் பயிற்சி
காலத்தை முடித்து, ஓர் ஆண்டை தாண்டி
விட்டது.
ஆனால்,
அவர்களின் சான்றிதழ்கள் உண்மையானதா என்பதை, அதிகாரிகள் சரிபார்த்து
முடித்தால்தான், ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு
கிடைக்கும்.பல மாவட்டங்களில், முதன்மை
கல்வி அதிகாரி அலுவலகங்களில், சான்றிதழ்களை
ஆய்வு செய்யும் பணிகள், முடியவில்லை. இதனால்,
திருப்பூர் மாவட்டத்தில், 600 பேர் உட்பட, மாநிலம்
முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் ஆகாமல்
உள்ளனர். மேலும், விடுப்பு, பணப்
பலன்கள் போன்றவை, நிறுத்தப்பட்டுஉள்ளன. இது குறித்து, தமிழ்நாடு
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக்கல்வி இயக்குனரை சந்தித்து, முறையிட்டுள்ளனர். இத்தகையோரிடம், பாடம் நடத்தும் ஆர்வம்
குறைந்துள்ளதால், 10ம் வகுப்பில், தேர்ச்சி
பாதிக்கும் என, ஆசிரியர்கள் கூறினர்.