TAM-NEWS

தமிழகம் முழுவதும் உள்ள 21 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதனால், ஆம்னி பஸ்கள், சரக்கு வாகன கட்டணம் உயர வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 390 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர்
மாதமும் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், வசூல் செய்யும் உரிமை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச்சாவடிகள் தனியார் வசம் உள்ளன. மீதமுள்ள 12 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் உள்ளன. ஆனாலும், கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டிற்கு ஒரு முறை வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி நல்லூர் (திருவள்ளூர்), கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜய மங்கலம் (குமாரபாளையம்), புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்) , மேட்டூர்பட்டி (சேலம்), பரணூர் (காஞ்சிபுரம்்), அதூர் (செங்கல்பட்டு), வல்லவன்கோட்டை (தஞ்சாவூர்), விக்கிரவாண்டி (விழுப்புரம்), புதுக்கோட்டை (தூத்துக்குடி), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), திருமாந்துரை (விழுப்புரம்), நெமிலி (பெரும்பதூர்) உட்பட 21 சுங்கசாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதன்படி 64 கி.மீ நீளமுள்ள சாலைகளுக்கு ஒரு தடவை செல்ல காருக்கு ரூ.75லிருந்து ரூ. 85 ஆகவும், லாரி, ஆம்னி பஸ் ரூ.144லிருந்து ரூ.165 ஆகவும் உயருகிறது. இதனால், மீண்டும் சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறும் போது, கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 சுங்கசாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தின் படி மீதமுள்ள 21 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதுஎன்றார்.

Related